Breaking
Sun. Nov 24th, 2024

வவுனியா நகரசபையினரின் உடல் வலுவூட்டல் நிலையம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக அங்கு வரும் அங்கத்தவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் குறித்த நிலையத்தில் தகுதியான பயிற்றுவிப்பாளர் எவரும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரசபையிலுள்ள உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு அண்மையில் உபகரணங்கள் சில கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அது தரமற்றவையாகவும், நீண்டகாலமாக பாவனையற்ற நிலையிலும் காணப்படுகின்றன.

நகரின் மத்தியிலுள்ள நகரசபையினரின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு அங்கத்தவர் ஒருவரிடமிருந்து 1000 ரூபா முற்பணமாகவும், மாதாந்தம் 750 ரூபாவும் நகரசபையினரால் அறவிடப்பட்டு வருகின்ற நிலையிலும் மலசலகூடம் துப்பரவு செய்யப்படுவதில்லை.

உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு பயிற்றுவிப்பாளர் இன்மையால் பலர் அங்கு செல்வதில்லை. தற்போது இருக்கும் அங்கத்தவர்களுக்கு சரியான முறையில் பயிற்றுவிப்பதற்கு பயிற்றுப்பாளர் இன்மையால் கடந்த பல வருடங்களாக வவுனியா நகரிலிருந்து உடல் வலுவூட்டல் போட்டியிற்கு செல்லவில்லை.

இது வவுனியா நகரிற்கு ஒரு குறைபாடாகவே காணப்படுகின்றது. பல திறமையானவர்கள் இருந்தும் நகரசபையினரால் இனங்கண்டு அவர்களை பயிற்றுவிப்பாளர்களாக இணைத்து செயற்பட முடியவில்லை.
நகரின் மத்தியிலுள்ள உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு பலர் செல்வதற்கு தயார் நிலையிலிருந்தும் அங்குள்ள குறைபாடுகளினால் பலர் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

நகரசபையின் இந்த குறைபாடுகள் தொடர்பாக நகரசபையின் உபநகர பிதா குமாரசாமியிடம் இன்று வினவிய போது,
உடல் வலுவூட்டல் நிலையத்தில் பயிற்றுவிப்பாளராக பணிபுரிவதற்கு 21 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில் இவ்விடயங்கள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மலசல கூடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக நகரசபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மலசலகூடத்தை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

துப்பரவு பணியாளர்கள் இருவர் கடமையாற்றி வருகின்றனர். எனவே துப்பரவின்மை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *