வவுனியா – செட்டிகுளம் பிரதேசத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்திக்கும் முகமாக இன்று செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா அபிவிருத்தி குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் வீட்டுத்திட்ட விடயங்கள், நெல் கொள்வனவு தொடர்பான விடயங்கள், பாடசாலைகளில் ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மதுபானசாலைகள் மற்றும் கள் விற்பனை நிலையங்களால் அன்றாடம் மக்கள் எதிர்கொள்ளும் விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை ஒருங்கிணைப்பு குழு தலைவரினால் சில விடயங்களுக்கு தீர்வுகளை காணுமாறு சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு அரச அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் எஸ். சிவகரன், உதவி பிரதேச செயலாளர், இராணுவ அதிகாரிகள், பொலிஸார், வைத்திய அதிகாரிகள் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.