வவுனியா – பெரியகோமரசங்குளம், கல்வீரன்குளம் ஆகிய விவசாயிகளை நெல் உரமானியம் வழங்குவதற்காக கையொப்பமிடுவதற்கு இன்றைய தினம் கோவிற்குளம் கமநல சேவைகள் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்களது வேலைகளையும் விட்டு கமநல சேவைகள் திணைக்களத்திற்கு வருகைத்தந்த விவசாயிகளிடம் “இன்று குறிப்பிட்ட சிலருக்கே சேவை வழங்க முடியும்” எனக் கூறி மற்றவர்களை நாளை மறுதினம் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா கோவிற்குளம் கமநல சேவைகள் உத்தியோகஸ்தரிடம் வினவிய போது,
எமது அலுவலக உத்தியோகஸ்தர்கள் சிலர் முருகனூர் பண்ணைக்கு சென்றுள்ளதால், ஒரு சில உத்தியோகஸ்தர்களே அலுவலகத்தில் கடமை புரிகின்றனர்.
எனவே எம்மால் 65 நபர்களுக்கு மாத்திரமே சேவையினை வழங்க முடியும், மற்றைய நபர்களை புதன்கிழமை வருமாறு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அன்றாடம் கூலி வேலைக்கு சென்று, குடும்பங்களின் வருமானத்தினை பெற்றுக்கொள்ளும் தங்களிடம் இன்று, நாளை என திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பது சரியா? என இந்த பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.