வவுனியா நகரில் ஆறு பேர்ச்க்கும் குறைவான அல்லது கூடிய காணிகளை கொண்டவர்கள் பெயர் மாற்றம் செய்து கட்டட அனுமதியினையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்று வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில இன்றையதினம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வவுனியா நகரசபையின் முயற்சியால் ஆறு பேர்ச்க்கும் குறைவான அல்லது கூடிய காணிகளை பெயர்மாற்றம் செய்வதுடன், கட்டட அனுமதியினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதிய சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் வவுனியா நகரில் அமைந்துள்ள ஆறு பேர்ச்க்கும் குறைந்த அல்லது கூடிய காணிகளை கொண்டவர்கள் இனிமேல் கட்டட அனுமதிகளையும் பெயர் மாற்றங்களையும் செய்து கொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன் உறுதிக்காணிகள் மற்றும் நீண்டகால குத்தகை காணிகளிற்கு மாத்திரம் இந்த நடைமுறை பொருந்தும். இது தொடர்பான மேலதிக தகவல்களை நகரசபை அலுவலகத்திற்கு வருகை தந்து பெற்றுக்கொள்ள முடியும்.
முன்னர் நகரசபைக்கு சொந்தமான பல வியாபார நிலையங்கள் கேள்வி முறையில் பலருக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வியாபார நிலையங்கள் போர் காலத்தின் போது இன்னொருவருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் சில கடைகள் விற்பனை செய்யப்பட்ட பின்னர் அதன் உரிமையாளர்கள் வெளிநாடுகளிற்கு சென்றிருக்கின்றார்கள்.
அப்படி பல கடைகள் இங்கு இருக்கின்றது. நகரசபை கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் அந்த கடைகளை இன்னொருவருக்கு விற்பனை செய்வதோ அல்லது வாடகைக்கு வழங்குவதோ தண்டணைக்குரிய குற்றமாகும். கடந்தவருடம் யாழ். மாநகரசபையில் இப்படியான கடைகளை உரிய ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் தற்போதைய உரிமையாளர்களிற்கு மாற்றிக்கொடுப்பதற்கான நடவடடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.
வவுனியாவிலும் இப்படியான பிரச்சனைகள் இருப்பதனால் அதனை மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் எடுத்துள்ளோம். அதற்கான அனுமதியினை வடமாகாண ஆளுனரிடம் கேட்டுள்ளோம். சரியான ஆவணங்களுடன் வியாபார நிலையங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அவர்களிற்கான பெயர் மாற்றங்கள் செய்யப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.