பேராறு நீர்த்தேக்கத்திலிருந்து வவுனியா நெளுக்குளம் தண்ணீர் தாங்கிக்கு நீர் கொண்டு வருவதற்கு குழாய் பதித்தல் நடவடிக்கைகள் பூரணமாக நிறைவடையாது உள்ளதால் நெளுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தாங்கி மக்கள் பாவனைக்கு கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மன்னார் ,வவுனியா உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதாரத்திட்ட முகாமையாளர் எந்திரி வே. உதயசீலன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தாங்கி தொடர்பாக தகவல்களை தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட தகவல்களுக்கே இவ்வாறு பதில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆசிய அபிவிருத்தி வங்கி அனுசரணையினூடாக உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதாரத்திட்டத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தாங்கியின் பணிகள் பௌதீகளவில் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
செலவளிக்கப்பட்ட நிதியின் விபரம் பொறியியல் சிட்டை அளவுகளின் படி மொத்த மதிப்பீடு ரூபா 294,792,195.00 இதனுடன் நெளுக்குளம் நீர்த்தாங்கி அமைக்கப்படவிருக்கும் இடத்தைத் துப்பரவு செய்தல், இயந்திர உபகரணங்கள் வழங்கல் மற்றும் விநியோகித்தல் மின் உபகரணங்கள் பொருத்தல் நீர் சேமிக்கும் தாங்கி மற்றும் பாதுகாவலாளிக்கான விடுதி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் இறுதிக்கொடுப்பனவுகள் முடிவடைந்த பின்னர் செலவளிக்கப்பட்ட மொத்த நிதியின் விபரங்கள் பெற முடியும். இவ்வளவு பணிகள் நிறைவடைந்தும் இன்று வரையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை.
அதற்கான காரணமாக பேராறு நீர்த்தேக்கத்திலிருந்து நெளுக்குளம் தண்ணீர் தாங்கிக்கு நீர் கொண்டு வருவதற்கான குழாய் பதித்தல் வேலைகள் பூரணமாக நிறைவடையாது உள்ளதால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.