வவுனியாவில் குளத்து காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சட்ட வேலிகள் மற்றும் கட்டடங்களை அகற்றும் நடவடிக்கையை கமநல அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் இன்று இரண்டு குளங்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து நிரந்தர மற்றும் தற்காலிக வேலிகளை அமைந்தவர்களுடைய வேலிகளை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து இச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, குளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு கோவில்குளம் மற்றும் ஆசிகுளத்தில் அமைந்துள்ள தரணிக்குளம் ஆகிய இரு குளங்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட வேலிகளை அகற்றி குறித்த காணிகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் குளத்து காணிகளை ஆக்கிரத்து நிரந்தர கட்டடங்கள் அமைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

