யாழ்.அராலி மத்தி பகுதியில் வீதியோன்று கடந்த 50 ஆண்டு காலமாக திருத்தப்படாமல் மிக மோசமாக சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அராலி மத்தியில் உள்ள குமுக்கன் வீதி இவ்வாறான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கையில் ,
குறித்த வீதியால் பயணம் செய்யும் பலரும் இதனால் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம் , மழை காலத்தில் வெள்ளம் தேங்கி நிற்பதனால் குறித்த வீதியால் பயணம் செய்யமுடியாத நிலைமைகள் ஏற்படுகின்றன. இதனால் பாடசாலை மாணவர்கள் வேலைக்கு செல்வோர் என பலரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் , யாழ்.மாவட்ட செயலாளர் , மற்றும் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் பல தடவைகள் முறைப்பாடு செய்யபட்ட போதிலும் , கவனிப்பார் அற்ற நிலையில் இந்த வீதி உள்ளது. அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பதிவு தபால்கள் மூலம் தெரியப்படுத்தி உள்ளோம். இதுவரையில் எமக்கு எந்த விதமான பதில்களும் அவர்களால் தரப்படவில்லை
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 50 கிலோ மீற்றர் வீதி புனரமைப்பு வேலையில் குறித்த வீதி உள்ளடக்கப்பட்ட போதிலும் அவற்றுடன் உள்ளடக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டு உள்ள போதிலும் இந்த வீதி இதுவரை புனரமைப்பு செய்யப்படவில்லை. அது தொடர்பில் பல அதிகாரிகளுக்கும் முறையிட்டு உள்ளோம்.