வறுமையை மட்டுப்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தை ஊக்குவிப்பதற்கும், திறனான அணுகுமுறையுடன் செயற்படுத்துவதற்கும் விசேட குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
இதன்படி, 2017 ஆம் ஆண்டை நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கான ஆண்டாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
அமைச்சர் சரத் அமுனுகம இந்த குழுவை தலைமை தாங்கவுள்ளதுடன், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, கபீர் ஹாசிம், சஜித் பிரேமதாச தென்மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, அத்துரலியே ரத்தன தேரர், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபயகோன் மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் அந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இதனிடையே, வறுமை ஒழிப்பு தொடர்பான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வௌியிட்டுள்ளது.
இதன்போது, மூலோபாக அணுகுமுறையுடன் வறுமையை ஒழிப்பதற்கான ஆண்டில் அதனை நிறைவேற்றும் பொருட்டு செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுனர்கள், முதமைச்சர்கள், அமைச்சு செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட சந்திப்பிலேயே ஜனாதிபதி இந்த குழுவை நியமித்துள்ளார்.
பிரதான திட்டத்தை வகுத்தல், அனைத்து துறையினரிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை பெற்றுக்கொள்வதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.