பிரதான செய்திகள்

வர்த்தகர் சகீப் சுலைமான் தலையில் அடித்தே! கொலை

(ரொஹான் குமார)

இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமான், கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர், கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில், பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து, இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டே படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலம், கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனெல்ல – ஹெம்மாத்தகம பிரதேசத்திலிருந்து, புதன்கிழமை (24) இரவு மீட்கப்பட்டுள்ளது. கம்பளை – ஹெம்மாத்தகம பிரதான வீதியின் ருக்குலுகம என்ற கிராமத்தின் பிரதான வீதிக்கருகிலிருந்த பள்ளமொன்றில், இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் மீட்கப்பட்ட போது, அச்சடலத்தில் டெனிம் டவுஸர் மட்டுமே இருந்துள்ளது. மேலாடை இருக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதிக்கு, புதன்கிழமை மாலை விறகு வெட்டச் சென்ற ஒருவர், சடலமொன்று கிடப்பதை கண்டு பிரதேசவாசிகளுக்கு தகவல்கொடுத்துள்ளார். இதனையடுத்து, அந்தத் தகவல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விரைந்துசெயற்பட்ட பொலிஸார், கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.

அப்பிரிவினரும் வர்த்தகரான சுலைமானின் உறவினர்களுடன் ஹெம்மாத்தகமவுக்குப் பறந்தனர். அங்கு சென்ற உறவினர்கள், சடலம் சுலைமானுடையது என்பதை அடையாளங்காட்டினர். அதன்பின்னர் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள், கேகாலை வைத்தியசாலையில், பிரதான சட்டவைத்திய அதிகாரி டொக்டர் ரமேஸ் அழகியவன்னவினால், நேற்று வியாழக்கிழமை (25) நடத்தப்பட்டது. வர்த்தகரான முஹம்மட் சகீப் சுலைமானின், காதுக்கு மேற்புறத்திலான தலைப்பகுதியில், பொல்லு ஒன்றினால் பலமாகத் தாக்கியதில், அவரது மூளை சிதைவடைந்து, அதிக இரத்தக் கசிவு ஏற்பட்டதாலேயே, மரணம் சம்பவித்துள்ளது என்று பிரேதப் பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது. இதேவேளை, அவருடைய அந்தரங்க உறுப்பு நசுக்கப்பட்டு காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், மாவனெல்லை நீதவான் மஹிந்த லியனகம, வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்று, மரண விசாரணைகளை மேற்கொண்டார். இந்நிலையில், வர்த்தகர் சுலைமானின் ஜனாஸா, நேற்று வியாழக்கிழமையே, கொழும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த வர்த்தகர், இறுதியாக உட்கொண்ட உணவு, சமிபாடடையவில்லை என்றும், பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது. ஒருவர் உட்கொள்ளும் உணவு, மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்களுக்குள் சமிபாடடையும். ஆனால், வர்த்தகர் சுலைமான் உணவு உட்கொண்டு ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே, மரணத்தை சம்பவிக்கக்கூடிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என சட்ட வைத்திய அதிகாரியினால், நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வர்த்தகர் சுலைமானின் மரணம் தொடர்பில், பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும், வர்த்தகர்கள் ஐவர், இந்நாட்டை விட்டு வெளியேற முடியாத வகையில், கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால், நேற்று, தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையை கவனத்திற்கொண்ட நீதவான், மேற்படி ஐவரும், வெளிநாடு செல்லமுடியாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு கட்டளையிட்டார். அதையும் மீறி, அவர்கள் வெளிநாடு செல்ல முற்பட்டால், அவர்களைக் கைது செய்யுமாறும், நீதவான் உத்தரவிட்டார். வர்த்தகர் காணாமல்போனமை தொடர்பில் இதுவரையில், 30 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

Related posts

அரசுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கானோர்: ஈராக் பாராளுமன்றம் சூறை

wpengine

நாடு திறக்கப்படும் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் முழுமையான திட்டம்.

wpengine

பாதை யாத்திரை பொய் சொல்லும் கீதா குமாரசிங்க (விடியோ)

wpengine