விவசாயிகள் பொருளாதார நிலையங்களுக்கு கொண்டு வரும் மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்யாத வர்த்தகர்களின் வரி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் மரக்கறிகள் மற்றும் பழங்களை வாங்க மறுக்கும் வர்த்தகர்கள், இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்வதாக விவசாயிகள், விவசாய அமைச்சிடம் முறைப்பாடு அளித்திருந்தனர்.
இதன் மூலம் விவசாயிகளையும் நுகர்வோரையும் சுரண்டும் திட்டம் பொருளாதார மையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் பொருளாதார நிலையங்களின் முகாமையாளர்களையும், பழங்கள் மற்றும் மரக்கறிகளை விநியோகிக்கும் விவசாயிகளையும் பொருளாதார நிலையங்களுக்கு அழைத்து விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
இதன்படி, விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்காத விற்பனை நிலையங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்து அவற்றை வேறு தரப்பினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.