புதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக முன்னெடுக்கப்படும். திருகோணமலை துறைமுகமானது மூன்று வருட கால துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கந்தளாய் அந்நஜா அரபுக் கல்லூரியில் இன்று பிரதேச முக்கியஸ்தர்களுடன் பிரதேசத்தி அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
திருகோணமலை துறைமுகம் ஏற்றுமதி, இறக்குமதி துறைமுகமாக மாற்றப்பட்டு இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பாக அமையும். இதே போன்று காங்கேசன் துறைமுக அபிவிருத்தியும் இவ்வாறு இடம்பெற காத்திருக்கின்றது.
1815ஆம் ஆண்டில் இறப்பர் தேயிலை ஏற்றுமதியினை ஆங்கிலேயர்கள் அன்றைய காலத்தில் திருகோணமலை துறைமுகம் ஊடாக மேற்கொண்டார்கள் .
பல வரலாறுகளை பறைசாற்றும் நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கும் வருமானத்திற்கும் துறை முகம் பாரிய பங்கம் வகிக்கிறது. இவ் வருட நிதி உதவிகள் திட்டத்தின் ஊடாக திருகோணமலை மாவட்டம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
கடந்த காலங்களில் 100 நாட்களில் 200 வேலைத்திட்டம் ஊடாக திருகோணமலை கிராமப் புறம் உள்ளிட்ட பல அபிவிருத்திகள் இடம்பெற்றன.
இவ்வருட நிதி ஊடாக மதஸ்தளங்களுக்கான அதிகமான நிதி உதவி ஊடாக வேலைத்திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படவுள்ளன.
நாட்டின் நல்லாட்சி அரசாங்கம் என்ற வகையில் அதற்குள் தொடர்ந்தும் ஆளுங்கட்சியினராகவே எமது தேசிய தலைமை றிசாத் பதியுதீனும் இருந்து வருகிறோம்.
கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கத்தை ஒரு தனி மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை றிசாத் பதியுதீனையே சாரும்.
புதிய யாப்பு சீர் திருத்தத்தில் மாகாண சபை சட்ட மூலத்தில் சிறுபான்மை சமூகத்தின் நலனுக்காக பாரிய பங்களிப்பினை முன்னெடுத்துள்ளோம் வரலாறு பேசுகின்ற ஒரு கட்சியின் தலைமையாக அமைச்சர் றிசாத் மாறியுள்ளார்.
பிரதம மந்திரியின் அபிவிருத்தி திட்டத்தில் திருகோணமலையும் உள்வாங்கப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டம் தோறும் இன மத பேதமற்ற முறையில் அபிவிருத்திகள் தொடரும் எமது கட்சியின் ஊடாக பல அபிவிருத்தி முன்னெடுப்புக்களை செய்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.