மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் பலருக்கு அங்குள்ள பாடுகளில் தங்கியிருந்து மீன்பிடிக்கக் கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளமையை அடுத்து, அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மீனவர்கள் அதனை எதிர்த்தும், கண்டித்தும் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் கடந்த சில தினங்களாக நடாத்தி வருகின்றனர்.
வன்னி மாவட்ட மக்களின் பிரதிநிதிகளான அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் எம்.பி மற்றும் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் இந்த அனுமதியை இரத்துச்செய்து, மன்னார் மாவட்ட மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்குமாறு கோரி பல்வேறு மட்டங்களிலும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். செல்வம் எம்.பி, மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் மீனவர்களுடன் இணைந்து, ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதேவேளை நேற்று மாலை (10/11/2016) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன், தான் புறப்படுவதற்குச் சில மணிநேரங்கள் முன்னதாக பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவை சந்தித்து, முசலி மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எடுத்துக் கூறியதுடன், அங்கு உருவாகியுள்ள அசாதாரண நிலை பற்றியும், மன்னார் மீனவர்களின் ஆதங்கங்களையும் தெளிவு படுத்தியிருந்தார்.
அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் அவர் விடுத்த கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிப்பதாக இந்த சந்திப்பில் உறுதிதியளிக்கப்பட்டது. இதன் பிரதிபலிப்பாக இன்று காலை (11/11/2016) கொழும்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் முசலி மீனவப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கூட்டம் ஒன்று நடைபெற்றது. வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹ_னைஸ் பாரூக், அமைச்சர் றிசாத்தின் விஷேடப் பிரதிநிதியாகப் பிரதியமைச்சர் அமீர் அலியும் கலந்துகொண்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தனர்.
இதில் வேடிக்கையும், வினோதமும் என்னவென்றால் முஸ்லிம் காங்கிரஸின் பிரதியமைச்சர் பைஸல் காஸிமும், பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் எம்.பியும் திடீரெனக் கலந்துகொண்டிருந்தமை மீனவர்களை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் எம்.பியும், முசலி மண்ணின் மைந்தனுமான சட்டத்தரணி முத்தலிப் பாவா பாரூக் மற்றும் மாகாணசபை உறுப்பினர் றயிஸ் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
வன்னி மக்களின் எந்தவொரு துன்பத்திலும் பங்கேற்காத, வன்னி அகதி முகாம்களை இற்றைவரை எட்டிப்பார்க்காத திருமலையையும், அம்பாறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மு.கா எம்.பிக்கள் கலந்துகொண்டமை, முசலி மக்கள் மீது கொண்ட பாசமா? அல்லது அமைச்சர் றிசாத் நாட்டில் இல்லாதபோது அரசியல் ஆதாயம் தேடுவதற்கு மேற்கொண்ட முயற்சியா? என்று மக்கள் கேட்கின்றனர். தமது மாவட்டங்களில் எத்தனையோ பிரச்சினைகள் உருவெடுத்து, தலைவிரித்தாடும் போது (திருமலையில் முறைகேடான குடியேற்றங்கள், இறக்காமம் சிலை விவகாரம்) திடீரென முசலி மக்கள் மீது காதல் கொண்டு, அவர்கள் வந்தது ஏன்? இந்தக் கேள்வி எல்லோர் மனதையும் குடைந்துகொண்டிருக்கின்றது.
இந்தக் கூட்டத்தில் வேதனை என்னவென்றால், அங்கு வந்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், தாங்கள் வந்த நோக்கத்தை விடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தபோது, அவரை முடியுமானவரை வசை பாடினர். இற்றைவரை காலமும் தூங்கிய மு.காவினர் தற்போது உண்மையாகவே மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக விழித்துக்கொண்டனரா? அல்லது விழித்தது போல் பாசாங்கு செய்கின்றனரா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.