வன்னி மக்களுக்கும், தெற்குக்கும் உறவுப்பாலமாக இருந்து வன்னி மக்களுடன் சேர்ந்து தொடர்ந்து பயணிப்பேன் என சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள கந்தசாமி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்னி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே எனது முக்கிய நோக்கம். வன்னி மக்களோடு கடந்த ஆறு வருடங்களாக பயணித்திருக்கிறேன். அதன் காரணமாக வன்னி மக்களின் மனோநிலையும், வாழ்வாதார நிலையும் எனக்கு நன்கு தெரியும்.
நான் வன்னி மக்களுடன் பயணித்த காலத்தில் என்னால் முடிந்த வாழ்வாதார உதவிகளையும், வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.
இதனை தொடர்ந்து செய்து மக்களின் வாழ்வாதாரங்களையும், வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்துவேன்.
அத்துடன் வன்னி மக்களுக்கும், தெற்குக்கும் உறவுப்பாலமாக இருந்து வன்னி மக்களுடன் சேர்ந்து தொடர்ந்து பயணிப்பேன் என தெரிவித்தார்.
இதேவேளை, கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களால் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் மதிப்பளிக்கப்பட்டதுடன் தொடர்ந்து வவுனியா பௌத்த விகாரை மற்றும் பள்ளிவாசலுக்கும் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.