Breaking
Sun. Nov 24th, 2024

ஊடகப்பிரிவு –

இன ஐக்கியத்தையும் சமூகங்களுக்கிடையிலான சமத்துவம் மற்றும் சமாதானத்தையும் நேசிக்கின்ற சக்திகளே சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்திருப்பதாகவும், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் ஒழிந்து, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அதீத சிந்தனை கொண்டவராக அவரைக் காண்கின்றோம் எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.


வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சஜித் பிரேமதாஸ தலைமையில், இன்று (03) முல்லைத்தீவில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


தொடர்ந்து உரையாற்றுகையில்,

சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ராதா கிருஷ்ணன், திகாம்பரம் மற்றும் முற்போக்கு சிந்தனைகொண்ட குமார வெல்கம போன்றோரும் ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர். சஜித் பிரேமதாஸ கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போதும், தேர்தல் முடிவின் பின்னரும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் ஒற்றுமையைக் கண்டார். இப்போதும் காண்கின்றார்.

அவர் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றி மக்களை நேசிப்பவர். எல்லா மதத்தவரையும் மதிக்கக் கூடிய பண்பாளர். இனங்களுக்கிடையிலே பேதங்கள் நீங்கவேண்டுமென சிந்திப்பவர் மாத்திரமில்லாமல், அவற்றை நடைமுறை அரசியலில் செய்து காட்டிய செயல் வீரர்.


அவர் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது, முல்லைத்தீவு மாவட்டம் மாத்திரமின்றி வவுனியா, மன்னார் மாவட்டங்களில் வாழும் ஏழை மக்களுக்கும் ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டி வழங்கியிருக்கின்றார். எனினும், ஆட்சி மாறியதால் பயனாளிகள் பலரின் அடுத்தகட்டக் கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் தடைப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னர் இந்தக் கொடுப்பனவு மக்களுக்கு கிடைக்குமென நாம் உறுதியாக நம்புகின்றோம்.

அதுமாத்திரமின்றி யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, இன்னும் வீடில்லாமல் பரிதவிக்கும் மக்களுக்கு, வீடுகள் வழங்கும் பாரிய திட்டமும் அவரிடம் உண்டு.
சஜித் பிரேமதாஸ ஒரு சாமானியர் அல்லர். அவரது தந்தையான ரணசிங்க பிரேமதாஸ, இந்த நாட்டிலே பல்வேறு அபிவிருத்திப் புரட்சிகளை மேற்கொண்டவர். கைத்தொழில் பேட்டை, ஜனசவிய போன்ற இன்னோரன்ன கருத்திட்டங்களின் மூலகர்த்தா அவர். அவரது வழியிலே தனயனும் பயணிக்கின்றார்.


யுத்தம் முடிவடைந்த பின்னர், நாங்கள் இந்தப் பிரதேசத்துக்கு வந்த போது, எதுவுமே இருக்கவில்லை. எல்லாமே அழிந்து கிடந்தது. எங்கு பார்த்தாலும் மயான பூமி போன்றே காட்சியளித்தது. மெனிக்பாமில் தஞ்சமடைந்திருந்த அகதி மக்களை மீண்டும் முல்லைத்தீவில், தமது சொந்த இடங்களில் குடியேற்றுவதில் நாம் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.


எமக்கிருந்த அமைச்சு அதிகாரங்களைக் கொண்டு மீள்குடியேற்றத்தை தொடங்கினோம். மிதிவெடிகளை அகற்றி, முதலில் கொட்டில்களை அமைத்து, படிப்படியாக கல்வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தோம். மீனவ சமுதாயத்தின் வாழ்வியல் தேவைகளை முடிந்தளவு நிறைவேற்றினோம். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு கண்டோம். மக்களின் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் அக்கறை காட்டினோம். சமூர்த்தி திட்டத்தைக் கொண்டு வந்து, சமூர்த்தி அதிகாரிகளை நியமித்து, பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்ற வழிவகுத்தோம். வேலைவாய்ப்புக்கள் கிடைக்க பக்கபலமாக நின்று உழைத்திருக்கின்றோம்.


எனவே, ஐக்கிய மக்கள் சக்தியில், இந்த மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களாகிய எங்களுக்கு, நீங்கள் வாக்குகளை வழங்கி, வெற்றியிலே பங்குதாரராகுங்கள்” என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களான தயானந்தன், ஹுனைஸ் பாரூக், கருணாதாஸ, பகீரதன், மோசஸ், கமிலஸ் பெர்னாண்டஸ் உட்பட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், ஜனூபர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *