லைக்கா ஞானம் அறக்கட்டளை அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.
தான் சார்ந்த சமூகத்துக்கும் பல தசாப்தங்களாக அல்லலுறும் தனது மக்களுக்காகவும் கடந்த பல வருடங்களாக அந்த அமைப்பு சேவை ஆற்றி வருகின்றது.
வெள்ளஅனர்த்த நிவாரணம், இடம்பெயர்ந்த மக்களுக்கான வாழ்வாதார வசதிகள் , வீட்டுத்திட்டங்கள் ,வறிய மாணவர்களுக்கான கல்வி வசதிகள், போக்குவரத்து வசதியற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், விசேட தேவையுடையவர்களுக்கு முச்சக்கர வண்டிகள், என எண்ணற்ற உதவித் திட்டங்களை பல மில்லியன் ரூபாய் செலவில் லைக்கா ஞானம் அறக்கட்டளை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் இடம்பெயர்ந்த, பாதிக்கப்பட்ட, வறுமையில் வாழுகின்ற மக்களுக்கும், வெள்ள அன்னர்த்தங்களில் முன்னர் பாதிக்கப்பட்ட, பெருமளவானகுடும்பங்களுக்கும், மாணவர்களுக்கும் மாதாந்த உதவித்தொகையையும் கூரைத்தகடுகள் உள்ளிட்ட பொருட்களையும் லைக்கா ஞானம் அறக்கட்டளை வழங்கி இருக்கின்றது.
லைக்கா ஞானம் அறக்கட்டளையின் உண்மையான நோக்கம் உட்பட்ட அனைத்து விபரங்களையும்; நன்கு தெரிந்திருந்தும் லைக்கா ஞானம் அறக்கட்டளை தனது வியாபார நோக்கங்களுக்காகவே இவற்றை செய்வதாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சார்ள்ஸ் நிமலநாதன் அவதூறு பரப்பியிருந்தார்.
சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்தின் இலங்கை பயணத்தையும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இலவசவீடுகளை வழங்கும் நிகழ்வுகளையம் குழப்ப முனையும் சக்திகளின் தூண்டுதல்களுக்கு இரையாகி போன சார்ள்ஸ் நிமலநாதன் இது தொடர்பாக இடம்பெற்ற தொலைக்காட்சி விவாத அரங்கில் இவ்வாறான பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிமலநாதனின் இந்த பொறுப்பற்ற செயலால், லைக்கா ஞானம் அறக்கட்டளை, தனது மன்னார் மாவடட செயற்பாடுகளை இடை நிறுத்திக்கொள்ள தீர்மானித்துள்ளது என்பதனை மன்னார் மாவட்ட மக்களுக்கு கவலையுடன் அறியத்தருகின்றோம் .