Breaking
Tue. Nov 26th, 2024
(ஊடகப் பிரிவு) 
அண்மைக்காலமாக வட  மாகாணசபைக்குள் நிலவிவரும் குழப்ப நிலையும் அதன் பின்னரான தீமானங்கள் மூலம் மாகாணசபைக்குள் ஏற்பட்டிருக்கும்  பிளவும் தமிழ் பேசும் சமூகத்தின் எதிர்கால அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்கி இருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலை தொடர்பாக தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு அனுப்பியியுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் பேசும் மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்களுடன் உருவாக்கப்பட்ட இந்த வட மாகாண சபை ஊழலற்றதாக இருக்க வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் எனவே முதலமைச்சர் என்ற வகையில் அவர் தனது கடமையை செய்திருக்கின்றார் மேலும் அதனையே மக்களும் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில் வட மாகாண சபைக்கு முதலமைச்சராக  விக்னேஸ்வரன் அவர்களே பதவி வகிக்க வேண்டும் ஏனெனில் நாட்டில் சிறுபான்மையாகவும் வடக்கில் பெரும்பான்மையாகவும்  வாழும் தமிழ்,முஸ்லிம் மக்கள் சார்பாக எடுக்கப்படும் எதிர்கால நலன் கருதிய தீர்மானங்களுக்கு என்னைப்பொறுத்த வரையில் மாகாண சபைக்கு சிறந்த தலைமைத்துவத்தை கொண்ட முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்களே காணப்படுகின்றார்.

மேலும் கடந்த காலங்களில் நாட்டில் மிக முக்கியமான கௌரவமான பதவி வகித்த தமிழர் ஒருவரை தமிழ் சமூகமே வீட்டுக்கு அனுப்புவது பொருத்தமான ஒன்றல்ல. குற்றம் யார் இளைப்பினும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை அந்த வகையில் முதலமைச்சர் தன் கடைமையை சரிவர செய்திருக்கின்றார் என்றே கருதுகின்றேன் அத்துடன் முதலமைச்சரின் நடவடிக்கை ஏனைய மாகாணங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகும்.

 என்னுடைய ஆரம்பமும் வடக்கில் ஊழலுக்கு எதிரான  அரசியல் பிரவேசமாக  காணப்படுவதை மக்கள் அறிவர் அந்த வகையில் மாகாண சபை அமைச்சர்கள்மட்டுமட்டுமன்றி மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதியாக இருந்தாலும்  ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டிருப்பின் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் தவறிழைக்காதவர்களுக்கு தண்டனைகளை வழங்கப்படக்கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கின்றேன். இதுவே மக்களினதும் புத்திஜீவிகளினதும் எதிர்பார்ப்பாகும்.

அத்துடன் இந்த மாகாணசபை குழப்பநிலை காரணமாக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது எனவே சம்பத்தப்பட்ட தமிழ்  சமூகத்தின் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த விடையத்தில் ஒருசில விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு மீண்டும் நாம்  ஒற்றுமையான தமிழ் பேசும் சமூகம் என முன்னுதாரணம் காட்டுமளவுக்கு ஒரே கூரையின் கீழ் ஒன்றிணையுமாறு தாம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *