தான் தற்போதும் அமைச்சர் என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதியாகிவிட்டது என வட மாகாணசபை உறுப்பினர் டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே உடனடியாக தனது அமைச்சுக்கு உரிய ஒழுங்குப்படுத்தல்களை தன்னிடம் தருமாறு அவர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அண்மையில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே டெனீஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக, வாணிப, கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து அமைச்சராக தான் தொடர்ந்து செயற்பட அமைச்சுக்கான இடத்தையும், செயலாளர் மற்றும் பணியாளர் உட்பட அந்த தொகுதியை விரைவில் ஒழுங்குபடுத்தி தருமாறு டெனீஸ்வரன் கடிதத்தில் கோரியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அமைச்சராக இருந்த பா.டெனீஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், அவரை அமைச்சு பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.
அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் வழக்கை ஜூலை மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.