வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் தத்தமது அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றும்படி ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக் களின் பின்னர் அண்மையில்தான் அமைச்சர்கள் மாற்றியமைக்கப்பட்டிருந்தார்கள்.
அதிலும் அமைச்சர் டெனீஸ்வரன் தான் பதவி விலக்கப்பட்டதை ஏற்க மறுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தப் பிரச்சினையே முடிவுக்கு வராத நிலையில் அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் சில அமைச்சுக்களின் செயலாளர்கள் மீதும் குறை கண்டிருந்தது.
அமைச்சர்கள் நிர்வாகத் தவறுகளை விடும் போது அவற்றைச் சுட்டிக்காட்டாமல் இருந்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்திருந்தது.
அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் செயலாளர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், இதுவரை அத்தகைய நடவடிக்கை எதுவும் முதலமைச்சரால் எடுக்கப்படவில்லை.
அறிக்கை மாகாண சபையில் முன்வைக்கப்பட்டது என்ற அடிப்படையில் மாகாணத்தின் தலைமைச் செயலாளர் குறித்த அமைச்சுக்களின் செயலர்களிடம் விளக்கம் கேட்டார் என்பதுடன் அந்தப் பிரச்சினை அடங்கிப் போய் விட்டது.
இப்போது அமைச்சின் செயலாளர்களை மாற்றும்படி அரசியல்வாதிகள் கேட்பது அவர்களின் தனிப்பட்ட விருப்புக்களின் படியே.
அதிகாரிகள் வினைத்திறன் அற்றவர்களாக இருப்பதன் காரணத்தாலேயே தங்களால் திறம்படச் செயற்பட முடிய வில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இது தெரிகிறது.
இன்று வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களாக இருப்பவர்கள் மக்களுக்காகத்
தாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற திட்டங்களைக் கொண்டவர்கள் அல்லர்.
அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டதும் தமது அமைச்சுக்களின் ஊடாக மக்களுக்கு எந்த வகையிலான அபிவிருத்தியை வழங்கப் போகிறார்கள் என்பதை அவர்களில் யாரும் எடுத்துக் கூறவில்லை.
அத்தகைய திட்டம், அதற்கான உத்திகள் குறித்து அவர்கள் மக்களிடம் எதனையும் பகிர்ந்து கொண்டதும் இல்லை. இருந்தால்தானே பகிர்ந்து கொள்ள முடியும் என்பதும் நியாயம்தான்.
இருக்கின்ற வசதி வளங்களைப் பயன்படுத்துவதற்கான சிறந்த தமைத்துவத்தை வழங்கவும் அவர்களால் முடியவில்லை. உதாரணத்திற்கு, வடக்கு மாகாண அமைச்சுக்களின் கீழ் பல்வேறு திணைக்களங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவற்றில் பல புதிய திணைக்களங்கள். அமைச்சின் கடிதத் தலைப்புக்களில் அந்தத் திணைக்களங்கள் குறிப்பிடப்பட்டாலும் நடைமுறையில் அத்தகைய திணைக்களங்கள் எவையும் இல்லை. மகளிர் விவகாரத்தை அதற்கான எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
அமைச்சர் அனந்தி சசிதரனின் அமைச்சின் கீழ் இது வந்தாலும் அதற்கான திணைக்களம் ஒன்று இல்லை. இது போன்று பல.
இந்தத் திணைக்களங்களை உருவாக்கினால் அதற்கூடாக பல நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
அதனைச் செய்வதற்கு மாகாண சபையில் அந்தந்தத் திணைக்களங்களுக்கான நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
ஆட்சியை நிறைவு செய்ய இன்னமும் ஒரு வருட காலமே இருக்கின்ற போதும் மாகாண சபையின் அரசியல்வாதிகளால் அது நிறைவேற்றப்படவில்லை.
இப்படிப் பலவற்றையும் மாகாண சபையின் அரசியல் தலைமைத்துவ செயற்றிறனின்மைக்கு எடுத்துக் காட்டுக்களாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
உண்மை அப்படியிருக்கையில் அதிகாரிகள் சரியில்லை அதனால்தான் எதனையும் செய்ய முடியாமல் போய்விட்டது என்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தத்தக்க விதத்தில் மாகாண அமைச்சர்கள் நடந்து கொள்வது சரியானதாகப்படவில்லை.
வடக்கு மாகாண அதிகாரிகள் மிகத் திறமையானவர்கள். அவர்கள் உன்னதமானவர்கள் என்று நியாயப்படுத்துவது இதன் நோக்கமல்ல.
அதேநேரம் அரசியல்வாதிகள் தங்கள் பலவீனங்களை மறைப்பதற்கு அதிகாரிகளைப் பலிக்கடாக்கள் ஆக்க முனைவதும் சரியானது அல்ல என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டி யிருக்கிறது.