வட மாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை வெளிப்படையாகவே இடம்பெறுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வட மாகாண சபையின் 59ஆவது அமர்வின்போது, கடந்த அமர்வில் முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட வட மாகாண அமைச்சர்கள் தொடர்பான விசாரணை குழு அமைப்பது குறித்த பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பிரேரணை தொடர்பில் அவைக்கு விளக்கிய முதலமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
வட மாகாண அமைச்சர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அமைச்சர்களும் உறுப்பினர்களும் வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில் விசாரணைகளையும் வெளிப்படையாகவே நடத்தவேண்டியள்ளதென முதலமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இதற்கென, விசாரணை தொடர்பான பின்னணிகளை உடையவர்களையே நியமிக்க வேண்டுமென்றும் மாகாண அமைச்சரவையில் அங்கம் வகிக்காத உறுப்பினர்களைக் கொண்டு விசாரணை நடத்தவேண்டுமென்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாதெனவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர்களை, முதலமைச்சரின் அதிகாரத்தைக் கொண்டு பதவிநீக்கம் செய்யலாம் என சில உறுப்பினர்கள் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், இவ்விடயத்தில் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாதென்றும் உரிய சாட்சியங்களுடன் விசாரணை நடத்தப்பட்டே தீர்மானம் எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.