வட மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்காக மத்திய வங்கியுடன் இணைந்து பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற உலக சாதனை நீச்சல் வீரர் ஆழிக்குமரனின் நினைவாக நீச்சல் தடாகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கைக்கான முதன்மைத் திட்டம் தற்போது உருவாக்கப்படுகிறது.
வட மாகாணத்தின் அனைத்து பொருளாதார பிரச்சினையையும் முழுமையாக கையாள்வதற்கு நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக 250 கோடி ரூபா நிதியில் பனை நிதியம் உருவாக்கப்படவுள்ளது.
அந்த நிதியமானது எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் சட்டரீதியான நிதியமாக அது அமைக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கம்பெரலிய எனப்படும் கிராம எழுச்சித் திட்டம் ஊடாக வடக்கு, கிழக்கில் 824 கோடி ரூபாவில் 17 ஆயிரம் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு இந்த வருட இறுதிக்குள் விமான சேவையை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், காங்கசேன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன் டொலர் நிதியிலான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.