Breaking
Mon. Nov 25th, 2024

(ஏ.எல்.ஜனுவர்)

மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்கி வட- கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ் உதுமாலெவ்வை தெரிவித்தார்.

மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தினால் மாகாண சபை அதிகாரங்கள் புதிய அரசியல் அமைப்பில்  எவ்வாறு அமைய வேண்டுமென்ற  விசேட அமர்வு மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் தலைவர் டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தலைமையில் (6) நேற்று நீர்கொழும்பு பிறவுன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் வட, கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள் தங்களது சமூகத்திற்கான .உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் வட, கிழக்கு மக்களின் பிரச்சிணைகளுக்கு தற்காலிக தீர்வாகவே நமது நாட்டில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட்டது. துரதிஸ்டவசமாக வட, கிழக்கில் நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக வட, கிழக்கு மக்களுக்கு மாகாண சபை முறைமையால் நீண்டகாலமாக நன்மைகளைப் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் வட,கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண சபைகள் நன்மைகளைப் பெற்றன. நமது நாட்டில் அமைந்துள்ள 9மாகாண சபைகளுக்கும் சமனான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரே நாட்டில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தும் போது 7மாகாண சபைகளுக்கு ஒரு முறைமையும், வட கிழக்கு மாகாண சபைகளுக்கு வேறு விதமான முறைமையும் அமுல்படுத்துவது குறித்து வட கிழக்கு மாகாண மக்கள் மாகாண சபை முறைமையில் நம்பிக்கையிழக்கும் நிலமை உருவாகியுள்ளது. எனவே மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்கி வட,கிழக்கு மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இனப்பிரச்சிணைக்கான தீர்வுகளை முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் வழங்குவார் என வட,கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை வைத்து சந்திரிக்கா அம்மையாருக்கு ஜனாதிபதித் தேர்தல்களில் வாக்களித்தனர். இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் முன்வைத்த போது நமது நாட்டில் உள்ள இனவாத அரசியல்வாதிகளால் அத்தீர்வுத்திட்டம் எரிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 30 வருட காலமாக நமது நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினை இல்லாமல் செய்த போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப்பரவலாக்கம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் நமது நாட்டில் உள்ள இனவாத சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் அத்திட்டத்திற்கு தடையாக இருந்து செயற்பட்டனர்.

இதன் காரணமாகவே நமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக அதி கௌரவ மைத்திரிபால சிறிசேன தமில் பேசும் மக்களின் அதிக ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். தமிழ் பேசும் மக்கள் புதிய ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கி அதிகார பகிர்வினை வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். எனவே, நமது நாட்டில் உள்ள இனவாதிகள் சிலருக்காக அரசு அதிகாரப்பகிர்வினை மேற்கொள்ளும் விடயத்தில் தாமதம் காட்டக்கூடாது.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று கூட 13வது சரத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்தமுடியாத துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டுள்ளது. மாகாண சபையின் 13வது சரத்தின் படி மாகாணங்களில் அமைந்துள்ள சிறிய நீர்ப்பாசன குளங்களை நிருவகிக்கும் பொறுப்பு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டு மீண்டும் மத்திய அரசாங்க கம நல சேவை திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மாகாணங்களில் வாழுகின்ற விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். எனவே, புதிய அரசியலமைப்பு திட்டத்தில் மாகாணங்களில் அமைந்துள்ள பாரிய நீர்ப்பாசன திட்டங்களை மத்திய அரசாங்க நீர்ப்பாசனத் திணைக்களம் நிர்வகிப்பதற்கும், மாகாணங்களில் அமைந்துள்ள சிறிய நீர்ப்பாசன குளங்களை மாகாண சபைகள் நிருவகிக்கும் முறையை மாகாண சபைகளின் நிருவாகம் பொறுப்பெடுத்து நேரடியாக கண்கானித்து மாகாணங்களில் வாழும் விவசாய மக்களின் வாழ்வாதார வளரச்சிக்கு உதவ வேண்டும்.

தற்போது அமைந்துள்ள 13வது சரத்தின் படி ஆளுனர்களுக்கு அதிகாரங்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் மாகாண ஆளுனர்களோடு முரன்படுவதை தவிர்த்து விட்டு நமது நாட்டிற்கான புதிய அரசியலமைப்பு திட்டத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண சபைகளுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்கி ஆளுனர்களுக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தக்கூடிய வகையிலே புதிய அரசியல் அமைப்பு உருவாகுவதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும். இலங்கையில்  அமைந்துள்ள மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்து பல சவால்களுக்கு மத்தியில் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் மாற்றுக் கொள்கைகக்கான நிலையத்தினருக்கு எமது மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாகாண சபைகளின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களும் கலந்துகொண்டனர்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *