கிழக்கின் எழுச்சி என்பது பிரதேசவாத நோக்கம் கொண்ட ஒரு சிந்தனையல்ல, அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை நம்பி ஏமாந்த மக்களின் உண்மையான உணர்வலையாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி. ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்….
இன்று வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒற்றைக்காலில் நிற்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதைத்தான் வலியுறுத்துகின்றது. அதற்கான முஸ்தீபுகள் திரைமறைவில் நகர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வாய் மூடி மௌனியாக இருக்கிறது. ஏன் இந்த இயலாமை.
இந்த ஆபத்தை உணர்ந்தே கிழக்கு முஸ்லிம்கள் இன்று கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அபாயகரமான சூழ்நிலையில் இருந்து முஸ்லிமகளை காப்பாற்றுவது எப்படி? எமது அடுத்த சந்ததியினரின் எதிர்காலம் என்ன என்பன தொடர்பில் கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் சமூக அமைப்புகள் சிந்திக்க தொடங்கியுள்ளன.
வடக்கையும் கிழக்கையும் மீள இணைக்கச் சொல்வதற்கு விக்னேஸ்வரனுக்கு எந்த அருகதையும் கிடையாது. கிழக்கு முஸ்லிம்களின் தலைவிதியை அவர் தீர்மானிக்க முடியாது. இது விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அதன் தலைவர் ரிஷாத் பதியுதீனும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதுடன் அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார்” என்று கலாநிதி ஜெமீல் குறிப்பிட்டார்.