எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது. அதேபோன்று மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடாது என்று தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட வேண்டும் என்று பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் ஆராய்ந்திருந்தது.
கொழும்பு உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் போட்டியிடும் மனோ கணேசன் தலைமையிலான அணிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் போட்டியிடுவது தொடர்பில் கூட்டமைப்பு கவனம் செலுத்தியிருந்தது.
கடந்த வாரம் மனோ கணேசனைக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் எனவும், கூட்டமைப்புக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மாத்திரம் போட்டியிடும் எனவும், அவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் எனவும் முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது உறுதிப்படுத்தியுள்ளார்.