Breaking
Sun. Nov 24th, 2024

வடக்கு – கிழக்கிலுள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,  “நாட்டை நடத்தி செல்ல வருமானம் அதிகமாக இருக்க வேண்டும். செலவு குறைவாக இருக்கவேண்டும். சாதாரணமாக கூறுவது என்றால் நாட்டில் பணம் இருக்க வேண்டும்.

உலகில் ஷ்டீவ் ஜொப்ஸ். பில்கேடஸ், ஜெக் மார்க் போன்ற மில்லியனர்கள், பில்லியனர்கள் தமது திறமையால், உழைப்பால் முன்னேறி வந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், எமது நாட்டில் மில்லியனர்கள் அதிகளவில் உள்ளனர்.

திருட்டுகளின் ஊடாக மில்லியனரகள் ஆனவர்கள் உள்ளனர். அவர்களின் திருட்டுகளுக்கு உதவி செய்த அரசியல்வாதிகள் உள்ளனர்.  திறமையால் முன்னேறியவர்களும் இருக்கின்றனர்.

எனினும்,  அரசியல்வாதிகள் உதவியுடன் பணம் சம்பாதித்தவர்களே அதிகளவானவர்கள் உள்ளனர். அண்மைய காலங்களை எடுத்துக்கொண்டால் ஒரு வருடத்துக்குள்ள பில்லியன் கணக்கில் இலாபம் பெற்ற தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களுக்கு அவ்வாறு முடியும் என்றால், அரசுக்கு வருமானம் குறைவடைந்தமை குறித்து அரசாங்கம் தேடியறிய வேண்டும்.

அரசு வழங்கிய வரி சலுகைகள் காரணமாக பொதுமக்களை விட நிறுவனங்களே அதிகளவில் நன்மை பெற்றனர். இன்று சீமெந்து, பால்மா, கேஸ் உள்ளிட்டவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன. சீனி மோசடி, வெள்ளைப்பூடு மோசடி என்று மோசடிகளை அடுக்கிக்கொண்டே செல்லாம்.

நான் விமர்சிக்கவில்லை. வரிச்சலுகை வழங்கப்படுவதால் சாதாரண மக்கள் மீதே தாக்கம் செலுத்துகின்றது.  பாரிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதில்லை.

எனவேதான், பொதுமக்களுக்கு நன்மை பெற்றுக்கொடுக்கும் வகையிலான வரிச்சலுகை முறையினரை அறிமுகப்படுத்துமாறு நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம். 

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க 2019 ஏப்ரல் பட்ஜட்டில் முன்மொழியப்பட்டது. இன்றுவரை 153 குடும்பங்களுக்கு மாத்திரம் அந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அந்த கொடுப்பனவும் 2019 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வழங்கப்படவில்லை. காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

எனினும், அதனை செய்யும் வரை அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். அதற்காக மரண சான்றிதல் வழங்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே  காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் வரை இந்த தொகை அந்த மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

வடக்கு – கிழக்கில் உள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எம்மிடம் உள்ளது. 

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு – கிழக்கில் உங்கள் அருகில் வைத்திருந்த அந்த நபர்கள் செய்த மோசடிகள், திருட்டுகள் காரணமாகவே நீங்கள் பாரிய தோல்வியை அந்தப் பகுதிகளில் சந்திக்க நேரிட்டது. இன்றும் அதுதான் நடக்க போகின்றது.

நிதியமைச்சரின் கட்சியை சேர்ந்த மூவரின் பெயரில் மட்டக்களப்பு மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் உள்ளது. பீ.சந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர். 

அடுத்தது, சதாசிவம் மயுரன் வியாழேந்திரனின் தம்பி, அடுத்தது, சிவனேசத்துறை சந்திரகாந்தன். இந்த தகவல்களை நாடாளுமன்றில் தான் நான் பெற்றுக்கொண்டேன். 

நாங்கள் நிதியமைச்சருடன் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி வேலைத்திடங்களில் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். எம்மிடம் சிறந்த முன்மோழிவுகள் உள்ளன. 

மாவட்ட ரீதியில் சில முன்மொழிவுகளை கூட எம்மால் வழங்க முடியாது உள்ளது. எனவே எமது திட்டங்களை முன்மொழிய எமக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள்.“ எனக்குறிப்பிட்டுள்ளார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *