முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஆதரித்து, தமிழ் முஸ்லிம் உறவை வலுப்படுத்த நினைக்கும் சம்பந்தன் ஐயா, மாவை , சுமந்திரன் போன்ற தமிழ் தலைவர்களுக்கும் அகில இலங்கை காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில், கனிந்து வரும் உறவாள் காழ்ப்புணர்வு கொண்டுள்ள அமைச்சர் ஹக்கீம் அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்களை வெளியிட்டு தனது இயலாமையை வெளிகாட்டி வருவதாக மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்று காலை (14.07.2017) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
வவுனியா ஆண்டியா புளியங்குளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பாக, அமைச்சர் ஹக்கீம் பேசிய கொச்சைத்தனமான கருத்துக்கள் பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், அவரது கட்சி சார்ந்த முகநூல்களிலும் வெளிவந்திருக்கின்றன. அமைச்சர் ஹக்கீம் போன்றவர்கள் இவ்வாறான கருத்துக்களையும், குரோதப் பேச்சுக்களையும் வெளியிடுவது எங்களைப் பொறுத்தவரையில் ஆச்சரியத்தை தராதபோதிலும் மக்களை அவர் பிழையாக வழிநடாத்த எத்தனிப்பதால் அது தொடர்பில் சில விடயங்களை இங்கு நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஏற்கனவே புத்தளம் மாவட்டத்திலும் அரசியல் கூட்டமொன்றில் பேசிய அமைச்சர் ஹக்கீமின் பேச்சு மக்கள் மனதில் அருவருப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் ஊடகங்கள் அவரை ஓர் அரசியல் ஜோக்கராக விமர்சித்திருந்தமையை உங்களுக்கு இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறந்து இங்கு வாழ்ந்து பின்னர் அகதியாக வெளியேறி, அவல வாழ்வை சந்தித்தவன் என்ற வகையிலும், கடந்த மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று, இந்த மாவட்த்தைப் பிரதிநிதித்துப்படுத்துபவன் என்ற ரீதியிலும் யதார்த்த நிலையை தெரிவிக்க வேண்டியது எனது பொறுப்பாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எந்தக் காலத்திலும் அகதியாக வாழ்ந்தவர் அல்லர். அகதிகளின் கஷ்டத்தை அவர் என்றுமே உணர்ந்தவரும் அல்லர். கட்சியின் தலைமை பதவியை கூட அவர் வலிந்து பெற்றுக்கொண்டவர். முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளராகவோ, தொண்டராகவோ அல்லது போராளியாகவோ எந்தக் காலத்திலும் அவர் இருந்தவரும் அல்லர். மாதலைவர் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் அவரது ‘நப்ஸ்’ தலைமை பதவியை கேட்டதனால் பல்வேறு திருகுதாளங்களின் மூலம் அந்தப் பதவியை பறித்தெடுத்தவர்.
மர்ஹூம் அஷ்ரப் வடமாகாண அகதி முஸ்லிம்களுக்கு மேற்கொண்ட பணிகள் காலத்தால் மறக்கமுடியாதவை. இந்தக் காரணத்தினாலேயே வடக்கு முஸ்லிம்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசை ஆதரித்தனர். இதனாலேயே நமது மக்கள் பாராளுமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை மு.கா சார்பில் அனுப்பிவைத்தனர். சகோதரர் ரவூப் ஹக்கீம் இந்தக் கட்சியை என்று பொறுப்பெடுத்தாரோ, அன்றிலிருந்து இந்தக் கட்சியின் தலைமைத்துவத்தில் வடக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் நம்பிக்கை இழந்தோம்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் பூரண நம்பிக்கை கொண்டு அதனை ஆதரித்து வருகின்றோம். எங்களின் இன்பதுன்பங்கள், மீள்குடியேற்றப்பிரச்சினை, வாழ்வாதாரப்பிரச்சினை, காணிப் பிரச்சினை மற்றும் இன்னோரன்னப் பிரச்சினைகளுக்கு எல்லாம் எங்களுடன் நின்று அதற்கு முகங்கொடுத்து வருபவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே. அவர் சீசனுக்கு சீசன் இங்கு வந்து பொய் வாக்குறுதிகளை அளித்துச் செல்பவர் அல்லர். எங்களின் நலனுக்காக இனவாதிகளுடன் அவர் மோதுகின்றார். ஏச்சும் பேச்சும் வாங்கி அவர் படுகின்றபாடு சகோதரர் ஹக்கீமுக்கு நன்கு தெரிந்திருந்த போதும் அரசியல் காழ்ப்புணர்பினாலும் தனது தலைமைக்கு அமைச்சர் ரிஷாட்டினால் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வீணாக உளறித்திரிகின்றார்.
முல்லைத்தீவு மீள்குடியேற்றத்தில் நாங்கள் படுகின்ற கஷ்டங்களை, தெரிந்தும் தெரியாதது போன்று ஹக்கீம் கதைத்து வருவதும் தேவையற்று மூக்கை நுலைப்பதும் வேதனையானது. மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டங்களிலும், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர் ரிஷாட் பதியுதீனும், நானும் இனவாதிகளுடன் போராடி, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக அவமானங்களை சந்தித்து வருகின்றோம் என்பதை ஹக்கீம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் மக்களின் குடியேற்றத்திற்கென முல்லைத்தீவு மாவட்டத்தில் 7முறை காணி கச்சேரிகள் வைக்கப்பட்டிருந்த போதும், இன்னும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. என்பதை மிகவும் வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நாங்கள் முன்னர் வாழ்ந்த எமது சொந்த காணிகளில் குடியேறுவதற்காக 25வருடங்களின் பின்னர் இங்கு வந்து காடுகளைப் துப்பரவாக்கிய போது, மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தனது அடியாட்களுடன் அங்கு வந்து டோசருக்கு முன்னாலேயே மக்களை குப்புறப்படுக்கச் செய்து மீள்குடியேற்றத்தை தடைசெய்த நிகழ்வை ஹக்கீம் மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைச்சர் ரிஷாட் அரசியலுக்காக சில அரசியல்வாதிகளுடன் முரண்படுவதாக கூப்பாடு போடும் சகோதரர் ஹக்கீம் இந்த நிகழ்வை எந்த கோணத்தில் பார்க்கின்றார். முஸ்லிம்களின் குடியேற்றத்தில் இற்றைவரை ஒரு மலசலக்கூடத்தேனும் கட்டிக்கொடுக்காத முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்காக பரிந்து பேசும் ஹக்கீம் என்றவாது ஒரு நாள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்கி அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று விக்கி ஐயாவிடம் கோரியிருக்கிறாரா? ஹக்கீம் தனது பேச்சின் மூலம் யாரை திருப்திப்படுத்த நினைக்கின்றார்? முதலமைச்சரையா? இனவாதிகளையா? அல்லது கோடரிக்காம்புகளையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
முல்லைத்தீவுக்கு முன்னர் ஒரு முறை வந்திருந்த மு.கா தலைவர் ஹக்கீம், இதே பாணியில் இனவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி, தமிழ் முஸ்லிம் உறவை பீற்றியதுடன் மாத்திரம் நில்லாது முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அதற்கு முடிவுகட்ட போவதாகவும் அவர்களுக்கு உதவி செய்யப் போவதாகவும் அறிக்கைவிட்டார். ஆனால் இன்றுவரை எதுவுமே நடக்கவில்லை. சரி, அதைத் தான் விடுவோம் இற்றைவரை வடக்கிலே முஸ்லிம்கள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினை தொடர்பிலேயாவது தமிழ்க் கூட்டமைப்புடனோ, அவர், நற்சான்றிதழ் பெற நினைக்கும் வடக்கு முதலமைச்சருடனோ ஒரு வார்த்தை தானும் பேசியிருக்கின்றாரா? அல்லது எந்தவொரு பிரச்சினையையாவது ஹக்கீம், அரசாங்கத்தின் உதவியுடன் தீர்த்து வைத்திருகிறாரா? அவ்வாறு கூறுவதற்கு அவருக்கு யோக்கியதை இருக்கின்றதா?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன், தாமும் தமதுகட்சியும் நல்லுறவுடன் இருப்பதாக வெளியுலகத்திற்கு பூச்சாண்டி காட்டும் இந்த ஹக்கீம், இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் விதம் விதமாக பேசுகின்றார். பாமர மக்களுக்கு விளங்காத புதிய தமிழ் சொற்களை தமது பேச்சில் செருகி தன்னை ஓர் அரசியல் ஜாம்பவனாக காட்டிக்கொள்கிறார்.
இதன் மூலம் தமிழ் மக்களையும், அப்பாவி முஸ்லிம்களையும் ஏமாற்றி, அரசியல் பிழைப்பு நடத்தும் கேவலத்தை ஹக்கீம் உடனடியாகக் கைவிடவேண்டும் என்பதை மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ் – முஸ்லிம் உறவின் இணைப்பு பாலமாக தன்னை இனங்காட்டி வரும் ஹக்கீம் தமிழ் – முஸ்லிம் உறவுக்காக இதுவரை காலமும் உருப்பிடியாக செய்தது தான் என்ன? எத்தனையோ அமைச்சுக்களை தன் வசம் வைத்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ், சிங்கள மக்களின் நலனுக்காச்க செய்த அபிவிருத்திப் பணிகளை பட்டியலிட்டுக் காட்டமுடியுமா? தனது சமூகத்தைச் சார்ந்த வடக்கு முஸ்லிம்களுக்கே எந்தவிதமான உதவிகளையும் செய்ய வக்கில்லாத ஹக்கீம் கடந்த அரசாங்க காலத்தில் அந்த அரசின் உதவியினாலும், ஆசிய அபிவித்தி வங்கியின் நிதி உதவியினாலும் ஆரம்பிக்கப்பட்ட நீர்வழங்கல், கருத்திட்டங்களுக்கு, இப்போது உரிமை கோருவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. அந்த துறைச் சார்ந்த அமைச்சராக அவர் இருக்கின்ற காரணத்தினாலேயே
அங்குரார்ப்பண விழாக்களில் அவரை அதிதியாக அழைக்கின்றனர். நிறைவு செய்து வருகின்றார். இந்த விழாக்களில் கலந்து கொண்டு இந்த அபிவிருத்தி பணிகள் தன்னால் முன்னெடுக்கப்பட்டதாக வெளியுலகத்திற்கு காட்டி, தனது சரிந்து போயிருக்கும் செல்வாக்கைச் சரிசெய்வதற்கு அவர் படுகின்றப் பாட்டை நாங்கள் என்னவென்று அழைப்பதோ தெரியவில்லை. இவ்வாறு மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்தார்.