Breaking
Fri. Nov 22nd, 2024

(ஊடகப்பிரிவு)

யுத்தத்தால் பாதிப்படைந்து நலிவுற்று வாழும் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப கைத்தொழில் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வரும் தொழிற்றுறைத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுபீட்சம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையினால் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள நறுவிலிக்குளத்தில்  அமைக்கப்பட்டுள்ள பனம் பொருட்கள் உற்பத்திக் கிராமம் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார்.

அமைச்சர் கூறியதாவது,

சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கம் அரிய பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டத்தில் மன்னார் மாவட்டமும் உள்ளீர்க்கப்பட்டு இந்த பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை வளர்ச்சி பெறச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த மக்கள் இந்த துறையின் பலாபலன்களை அனுபவிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

மன்னார் மாவட்டத்தில் பனம்பொருள் உற்பத்தி  பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்காக நறுவிலிக்குளத்தில் புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளோம். நறுவிலிக்குள மக்களுக்கு இன்றைய நாள் ஒரு ஒரு சுபீட்ச நாளாக அமைந்த போதும் ஒட்டுமொத்த மன்னார் மாவட்ட மக்களும் இதன் மூலம் பயனடைந்து நமது வாழ்க்கையை வளப்படுத்த முடியும். மன்னார் மாவட்டம் பனைவளம் நிறைந்த பூமி. எனினும் திட்டமிட்ட அடிப்படையில் இந்த துறையை கடந்த காலத்தில் அபிவிருத்தி செய்ய முடியவில்லை. எனவேதான் இந்த துறையை வளர்த்தெடுத்து மக்களுக்கு இலாபம் ஈட்டக்கூடிய துறையாக இதனை மாற்றியமைக்க வழி செய்துள்ளோம்.
இது தொடர்பான பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கு மூலப்பொருட்களையும் சாயம் போன்ற இன்னோரன்ன பொருட்களையும் வழங்கியிருப்பதோடு தையல் மெஷின்களையும் வழங்குகின்றோம். பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கு பகரமாக நாம் இந்த சாதனங்களை வழங்கிய போதும் அவர்கள் இதனைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் தமது பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். கூட்டுறவின் அடிப்படையில் இந்த தொழிலை திட்டமிட்டு மேற்கொண்டால் அபரிமிதமான இலாபம் ஈட்ட முடியும். இவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம். அதன் மூலம் இந்த முயற்சியை இடையறாது மேற்கொள்ள முடியும். நறுவிலிக்குள கிராமத்தை நாங்கள் பனை அபிவிருத்தி உற்பத்தி கிராமமாக பிரகடனம் செய்துள்ளமையை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். கைத்தொழில் வர்த்தக அமைச்சு இவ்வாறான பயிற்சிகளைப் பெறுவதற்கு சுமார் 25,000 பேர் பதிவு செய்துள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்னற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண அமைச்சர் டெனீஷ்வரன், தேசிய அருங்கலைகள் பேரவையின் ஹிஷானி போகல்லாகம, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மதுல்லா, கிரபைக் நிறுவன பணிப்பாளர் அலிகான் ஷரீப், மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் ஸ்டான்லி டி மெல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *