வடக்கு, கிழக்கில் தமது கட்சியின் அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள் அடுத்த வாரம் அப்பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர். பொது எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக் ஷ தலைமையிலான குழுவினரே இவ்வாறு விஜயம் செய்து கட்சியின் செயற்பாடுகளை வடக்கு கிழக்கில் வியாபிப்பது குறித்து ஆராயவுள்ளனர்.
எதிர்வரும் 21, 22, 23 ஆம் திகதிகளில் பஷில் ராஜபக் ஷ தலைமையில் இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். முன்னாள் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் முக்கியஸ்தர்களே இவ்வாறு அங்கு செல்லவுள்ளனர்.
யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் தமது கட்சிக்கு புதிய அமைப்பாளர்களை நியமிப்பது குறித்தும் தமது கட்சிக்கான ஆதரவினை திரட்டுவதற்கான நடவடிக்கைகளை இந்த குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர். மூன்று தினங்கள் அங்கு தங்கியிருந்து மக்களையும் இவர்கள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைவிட மாகாண சபைத் தேர்தல்களும் அடுத்த வருடம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவைத் திரட்டும் முகமாகவே பொது எதிரணியைச் சேர்ந்த குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.