வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து 20 பேர் ஆசிரியர்களாக இணைந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டு, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன் தெரிவித்தார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நியமனம் பெற்று ஆசிரியர்களாக சேவையாற்றியவர்களே இவ்வாறு இனங்காணப்பட்டனர். சேவைக் காலத்தில் சேவையை நிரந்தரமாக்குவதற்கு சான்றிதழ் உறுதிப்படுத்தல் நடைமுறை இடம்பெறும். இதற்காக அவர்களின் சான்றிதழ் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அனுப்பப்படும்போதே 20 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் சேர்ப்பித்தமை கண்டறியப்பட்டது. இதில் இருவர் அதிபராகவும் தேர்வாகியிருந்தனர், 20 பேரில் ஆசிரியைகளும் உள்ளடங்குகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போலிச் சான்றிதழ் என்று இனங்காணப்பட்ட அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டதோடு, அவர்கள் சேவையாற்றிய காலத்தில் பெற்ற அரச கொடுப்பனவுகள் அனைத்தும் மீளச் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அவ்வாறு குறித்த கொடுப்பனவுகளை மீழ் செலுத்த மறுப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் இ. இரவீந்திரன் கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.