Breaking
Sun. Nov 24th, 2024
மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் அலுவலக கட்டிடம் மற்றும் வடக்கில் இடம்பெயர்ந்தோருக்காக அமைக்கப்படவுள்ள வீடுகள் என்பவை தொடர்பில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மீள்குடியேற்ற அமைச்சுக்கான புதிய அலுவலக கட்டிடம் ஒன்றுக்காக கேள்விப் பத்திரம் கோரப்பட்டு, முதலாவது கட்டிடம் அதற்கு பொருத்தமானதல்ல என்ற அடிப்படையில் அது கைவிடப்பட்டது.

இதில் குறித்த கட்டிடம் தாம் எதிர்பார்த்ததை விட பெரியது என்ற காரணம் கூறப்பட்டுள்ளது.

எனினும் இரண்டாவது கட்டிடத்தை அமைச்சு தெரிவு செய்த போது, அதற்காக கேள்விப் பத்திரம் கோரப்படாமல், கட்டிடம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த கொள்வனவின் போது ஏற்கனவே மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்ட போதும், அமைச்சின் செயலாளராக மீள்மதிப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இதன்போது முன்னர் மீள்மதிப்பீடு செய்யப்பட்டதைக் காட்டிலும் அதிகமான தொகைக்கே இரண்டாவது மீள்மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே இதில் ஊழல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

அதேநேரம், வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே இந்தியாவின் வீடமைப்பின்போது, ஒரு வீடு 5 லட்சம் ரூபாவுக்கு கட்டி முடிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வீடுகள் 6 லட்சத்துக்கு கட்டி முடிக்கப்பட்டன. எனினும் அமைச்சு புதிதாக கட்டவிருக்கும் வீடுகளுக்கு 21 லட்சம் ரூபாய்
மதிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே இங்கு பாரிய நிதித் துஸ்பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் என்று அனுரகுமார திஸாநாயக்க சந்தேகம் வெளியிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,

அமைச்சுக் கட்டிடம் தொடர்பில் அனுரகுமார திஸாநாயக்கவின் குற்றச்சாட்டை மறுதளித்தார்.

ஏனைய அமைச்சுக்களின் கட்டிடங்கள் ஒது சதுர அடி 160 ரூபா என்ற அளவில் வாடகைக்கு பெறப்பட்டுள்ள நிலையில், கொழும்பு – கொள்ளுப்பிட்டு – காலிவீதிக்கு அருகில் உள்ள தமது அமைச்சின் கட்டிடம் சதுர அடி 114 ரூபாவுக்கு வாடகைக்கு பெறப்பட்டுள்ளது.

எனவே இங்கு பாரிய நிதி வெளியேறல் தடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் கேள்விப் பத்திரம் கோரப்படவில்லை என்ற அனுரகுமார திஸாநாயக்கவின் கேள்விக்கு அமைச்சர் பதில் வழங்கவில்லை.

இதேவேளை, வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளை ஃப்ரான்சின் பிரசித்த நிறுவனம் ஒன்று அமைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வீடுகளைக் காட்டிலும், இந்த வீடுகள் மலசலகூட வசதிகளுடனும், வீட்டுத் தளபாட வசதிகளுடன், வைஃபை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.

எனவேதான் அதற்கு 21 லட்சம் ரூபாய் வரையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இதற்காக பெறப்படும் கடனை 12 வருட காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் முதல் இரண்டு வருடங்கள் எவ்வித திருப்பிச் செலுத்தலையும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட அனுரகுமார திஸாநாயக்க சாதாரண முறையின்படி வீடுகள் கட்டப்படும் போது, வீடுகள் கட்டுவதற்கு தனியான கேள்வி பத்திரமும், தளபாட கொள்வனவுக்கு தனியான கேள்விப் பத்திரங்களுமே கோரப்பட வேண்டும்.

எனினும் அமைச்சரின் உத்தேச வீடமைப்புக்கு ஏன் இரண்டு விடயங்களுக்கும் ஒரே கேள்வி பத்திரம் கோரப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் சபாநாயகரின் உத்தரவுக்கு அமைய இந்த விடயத்தை முடிவுக்கு கொண்டுவரும் நிலையில் கருத்துரைத்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக குடியேற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.

எனவே இந்த விடயத்தில் ஜே வி பி அதற்கு எதிராக செயற்படக்கூடாது என கேட்டுக் கொண்டார்.

2015ம் ஜனவரி மாதம் அரசாங்கம் முன்மொழிந்த வாக்குறுதிகளுக்கு அமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது தமது ஆட்சேபனையை வெளியிட்ட ஜே வி பி உறுப்பினர்கள், அவசரமாக செய்ய வேண்டும் என்பதற்காக பொது மக்களின் நிதி வீண்விரயம் செய்யப்படக்கூடாது என கோசம்
எழுப்பினர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *