பிரபல றக்பி வீரர் வசிம் தாஜூதீன் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சீ.சீ.டி.வி காணொளிகளை பரிசோதனை செய்யும் பொருட்டு, கனடாவுக்கு எடுத்துச்செல்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி இந்த காணொளிகள் கனடாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த காணொளிகளில் உள்ள காட்சிகள் தெளிவற்று இருப்பதாக, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே, கனடாவில் அமைந்துள்ள கணினி தொழில்நுட்ப நிறுவனத்துக்கு இந்தக் காணொளிகளை எடுத்துச் செல்வதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த சீ.சீ.டி.வி காணொளிகளை, உதவி பொலிஸ் அத்தியட்சகர் அடங்கிய குழுவினர் கொண்டு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளவத்தை முருகன் வீதியை வசிப்பிடமாக கொண்ட றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன், நாரஹேன்பிட்டியவில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து, 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, அவர் பயணம் செய்து கொண்டிருந்த கார், திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், அவர் மரணமடைந்துவிட்டதாக அந்தக் காலத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தன. அவருடைய சடலம், மறுநாள் 17ஆம் திகதியன்று, காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும் காருக்கருகில் கரித்துண்டுகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.