Breaking
Sun. Nov 24th, 2024
(ஆர்.ஹஸன்)
கிழக்கின் முதலமைச்சராக சிங்களவர் ஒருவர் வரவேண்டும் என நான் வலியுறுத்தியதாக அப்பட்டமான பொய் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வடகிழக்கு இணைப்புக்கு எதிராக தான் கருத்துத்தெரிவித்து வருவதால் இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்பி, மக்களை குழப்பி தனக்கெதிராக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கான முயற்சிகள் திரைமறைவில்  மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கெதிராக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் என்ற ரீதியில் நான் மாத்திரமே பகிரங்கமாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றேன். இதனால் எனக்கெதிராக  திட்டமிட்ட வகையில் பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், “கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாகவும் -சம உரிமையுடன் சகல அதிகாரங்களையும் பெற்று வாழ்ந்து வரும் நிலையில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் அந்நிலை இல்லாது போகும். அத்துடன், கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருந்தார், தற்போது முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக உள்ளார். எதிர்காலத்தில் சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வர முடியும்” என்ற ரீதியில் நான் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஏறாவூரில் தெரிவித்த கருத்தை சிலர் திரிவுபடுத்தி “கிழக்கில் சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும்” என்று நான் வலியுறுத்தியதாக சில ஊடகங்கள் மூலம் அப்பட்டமான பொய் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கிழக்கு மாகாணத்தை யார் ஆள வேண்டும் என்பதை கிழக்கு மக்கள் தான் தீர்மானிப்பார்கள். அதனை வெளிச்சக்திகள் தீர்மானிக்க முடியாது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் ஒற்றுமையோடு சம உரிமைகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது அவரது அமைச்சரவையில் முஸ்லிம்கள் சார்பில் நானும், உதுமாலெப்பையும் அமைச்சர்களாக இருந்தோம். வீமலவீர திஸாநாயக்க மற்றும் நவரட்ன ராஜா ஆகியோரும் அமைச்சர்களாக இருந்தனர்.  ஆனால், எமக்கிடையில் எந்தவித பிரச்சினைகளுமின்றி சிறப்பானதொரு நிர்வாகத்தை நாங்கள்  மேற்கொண்டிருந்தோம்.

ஆனால், தற்போது அந்நிலை மாறியுள்ளது. கிழக்கில் இனவாத அரசியலை மேற்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என சில சக்திகள் நினைத்துக்கொண்டுள்ளன. இந்நிலை, கிழக்கின் ஒற்றுமைக்கே பாதிப்பாக அமையும்.
நான் எந்த இடத்திலும் ‘சிங்களவர் ஒருவர் கிழக்கின் முதலமைச்சராக வர வேண்டும், என வலியுறுத்தவில்லை. அப்படி சிங்களவர் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டிய தேவையோ- எண்ணமோ எமக்கில்லை. நான் வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை விமர்சித்து பேசும் போது ஒரு கட்டத்தில் கிழக்கில் மூவினத்துக்கும் அதிகாரம் உள்ளன. தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக இருந்தார். தற்போது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த நஸீர் அஹமட் முதலமைச்சராக உள்ளார். எதிர்காலத்தில் சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வரமுடியும். இந்நிலை வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டால் இல்லாது போகும் என்றே குறிப்பிட்டேன்.

ஆனால் இதனை சில ஊடகங்கள் திரிவுபடுத்தி நான் “சிங்களர் ஒருவர் கிழக்கின் முதல்வராக வர வேண்டும்’ என்று வலியுறுத்தியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன. இது அப்பட்டமான திரிவுபடுத்தப்பட்ட செய்தியாகும். தேர்தல் நெருங்கும் போது இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் சேறு பூசுகின்ற சதித்திட்டங்களை சில சக்திகள் மேற்கொண்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும் என்றார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *