பிரதான செய்திகள்

றிஷாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கும் மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காது

அமைச்சர் ரிஷாட் பதியூதின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் முதலில் குரல் கொடுப்பவன் நானாகவே இருப்பேன்.


அதைவிடுத்து அரசியல் இலாபத்திற்காக அவர் மீது குற்றம் சாட்டுவதையும் அவரக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கும் மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காது என மலையக மக்கள் முன்னணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டன் வெளிஓயா மேற்பிரிவு தோட்டத்தில் சுதந்திரபுரம் வீடமைப்பு திட்டத்தில் 30 குடும்பங்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன் முதற்கட்டமாக 12 குடும்பங்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது அமைச்சர் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர், மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானமானது அமைச்சர் மீது தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையாகும்.

அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றவர்களின் சதி திட்டமாகவே இதனை மலையக மக்கள் முன்னணி பார்க்கின்றது.

சிறுபான்மை கட்சிகளும், சிறுபான்மை மக்களும் இந்த சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

அமைச்சர் ரிஷாட் பதியூதின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை குழு அமைக்கப்பட்டு அவர் மீது குற்றம் இணங்காணப்படும் பட்சத்தில் அதற்கு அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்க தயாராக இருக்கின்றேன்.

அதைவிட்டு வெறுமனே வதந்திகள் மூலமாகவும் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கு தனது ஆதாயத்தை தேடிக்கொள்ளும் நோக்கத்துடனும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவை எவையும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஆனது வெற்றிப்பெற்றால் இந்த நாட்டின் மீது சர்வதேச ரீதியான முஸ்லீம்களுக்கு வெறுப்பு ஏற்படும். முஸ்லீம்கள் பழிவாங்கப்படுவதாக அவர்கள் கருதுவார்கள்.

இதன் மூலம் உல்லாச பிரயாணிகளாக வர விரும்பும் முஸ்லீம்கள் அதனை தவிர்த்துக் கொள்ளுவார்கள். இன்னும் பல முஸ்லீம் நாடுகளை நாம் நேரடியாக பகைத்து கொள்ள வேண்டி வரும். எனவே இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடாக நான் கருதவில்லை.

குற்றம் சுமத்தப்படுகின்ற முஸ்லீம் அமைச்சர்கள், முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அணைவர் மீதும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மையிலேயே அவர்கள் குற்றம் செய்து இருப்பார்களேயானால் அதற்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்க நான் தயாராக இருக்கின்றேன்.

அதைவிடுத்து அரசியல் நோக்கத்திற்காக ஒரு சிலரின் அரசியல் சுய வளர்ச்சிக்காக கொண்டு வரப்படும் இவ்வாறான தீர்மானங்களை நாம் என்றும் ஆதரவு அளிக்க மாட்டோம் எனவும், 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி அன்று முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக விரோத செயலுக்கு எதிராகவும் நாங்கள் இதே நிலைப்பாட்டையே கொண்டு இருந்தோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

புதுக்குடியிருப்பு, கைவேலி ‘சுயம்’ அமைப்பினருக்கு புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் உதவி

wpengine

வட கொரியர்கள் ஐ.நாவின் கறுப்பு பட்டியலில்

wpengine

57 சபை அமர்வி்ல் ஒரு தடவை மட்டும் கலந்துகொண்ட மு.கா. முஹம்மது றயீஸ்

wpengine