இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பிரதான குற்றவாளி மற்றும் சூத்திரதாரிகள் என அனைவரும் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியிலேயே இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கூட்டணியின் அங்கத்தவர்களாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஆட்சி வந்ததும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் என கூறினார்கள்.
றிசாட் பதியூதீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தினர். ஈஸ்டர் தாக்குதலுடன் தனக்கு தொடர்பு இருந்தால், தன்னை கைது செய்யுமாறு றிசார்ட் பதியூதீன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய போதிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
ஆளும் கட்சி எதிர்க்கட்சியில் இருந்த போது றிசாட் பதியூதீன் மீது அரசியல் ரீதியாகவே குற்றம் சுமத்தி வந்தது.
அதேவேளை இளைஞர், யுவதிகளுக்கு ஒரு லட்சம் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என அரசாங்கம் கூறினாலும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் 10 ஆயிரம் வேலை வாய்ப்புகளை வழங்குமாறு சவால் விடுப்பதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.