Breaking
Sun. Nov 24th, 2024

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

கல்முனைக்குடியில் நாளை (1) நடைபெறவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கலந்து கொள்ளும் கூட்டம் முன்னர் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் இடம்பெறாதபடி இடையூறுகளும் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த காணியின் உரிமையாளரை ஒரு முஸ்லிம் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் கொழும்பிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த இடத்தை வழங்க வேண்டாம் என்றும் அவ்வாறு மீறிச் செயற்பட்டால் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார். இதனால் அச்சமடைந்த நபர், தனது காணியை அமைச்சரின் ரிஷாத்தின் கூட்டம் நடத்துவதற்கு வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தக் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கல்முனைக்குடி பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகமும் தங்கள் பள்ளிவாசலில் முதலாம் திகதி மாலை முதல் இரவு 10.00 மணி வரை திக்ர் மஜ்லிஸ் இடம்பெறவுள்ளதாகவும் குறித்த கூட்டம் நடைபெறும் போது பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி பாவனையால் திக்ர் மஜ்லிஸ் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கூட்ட ஏற்பாட்டாளர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த விடயத்தை பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளரே கையாள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள் வேறொரு இடத்தை தெரிவு செய்வதிலும் அதற்கான பொலிஸ் அனுமதியைப் பெறுவதிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கல்முனைக்குடியில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் பெண்களுக்கு தையல் மெஷின்களையும் மற்றும் இன்னோரன்ன உதவிகளையும் வழங்கவுள்ளார். இவ்வாறானதொரு கூட்டத்துக்கே இவ்வளவு இடையூறுகளும் தடைகளும்.

இது இவ்வாறிருக்க, மாவடிப்பள்ளி நூலக அபிவிருத்திக்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது சொந்த நிதியியிலிருந்து சுமார் 6 இவட்சம் ரூபாவை வழங்கியிருந்தார். இதனைக் கொண்டு பெறப்பட்ட நூல்கள் மற்றும் இன்னோரன்ன வசதிகளுடன் குறித்த வாசிகசாலையும் நாளை அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் திறக்கப்படவிருந்த நிலையில் அதற்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வாசிகசாலை கிழக்கு மாகாண சபையின் கீழ் வருவதால் அதனை கிழக்கு மாகாண முதலமைச்சரே திறக்க வேண்டுமென்றும் வேறு எவருக்கும் அனுமதி வழங்கக் கூடாது எனவும் காரைதீவு பிரதேச சபையின் செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இது தொடர்பில் என்னுடன் தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்த மாவடிப்பள்ளி வாசிகசாலை அபிவிருத்தி குழுவின் தலைவர் இர்ஷாத் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வாசிகசாலையின் அபிவிருத்தி தொடர்பில் பல கட்சிகளின் அரசியல்லவாதிகள் உட்பட பலரிடமும் தெரிவித்தோம். இருப்பினும் எவரும் எமக்கு உதவ முன்வரவில்லை. இந்த நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைச் சந்தித்து இது தொடர்பில் கூறிய போது அவரது சொந்த நிதியிலிருந்த 6 இலட்சம் ரூபாவை எமக்கு வழங்கினார். அதனைக் கொண்டு நாம் நூலகத்துக்கு தேவையானவற்றைக் கொள்வனவு செய்தோம்.

இந்த நூலகத்தை நாளை திறப்பது தொடர்பில் காரைதீவு பிரதேச சபையின் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். அதன் போது அவர் இது தொடர்பான நிலைமைகளை விளக்கினார். கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை பிரதேச செயலகத்தில் ஒப்படைத்து பிரதேச சபையின் மூலம் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தினார். (இது பிரதேச சபையின் செயலாளரின் தவறோ தனிப்பட்ட நிலைப்பாடோ அல்ல)

குறித்த வாசிகசாலையை கிழக்கு மாகாண முதலமைச்சரே திறக்க வேண்டுமென அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரதி ஒன்றினை தர முடியுமா என பிரதேச சபை செயலாளரிடம் கேட்டோம். அதனை அவர் நாளை தருவதாக தெரிவித்தார். இதன் பின்னர் பிரதேச சபை செயலாளருடன் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது என்று மாவடிப்பள்ளி வாசிகசாலை அபிவிருத்தி குழுவின் தலைவர் இர்ஷாத் என்னிடம் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *