Breaking
Sun. Nov 24th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமத், கல்குடாவில் கல்குடா தொகுதி அமைப்பாளரான ரியாலினால் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் கொண்டு வரப்படும் சேவைகளை தனது சேவைகளாக காட்ட முற்படுவதாக ரியாலின் ஆதரவாளர்கள் அதிருப்தி வெளியிடுவதை அவதானிக்க முடிகிறது. எதிர் வரும் 13ம் திகதி கல்குடா அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் ரியாலை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் செய்தி வெளியிட்டுள்ளது. இதிலுள்ள பல சேவைகள் ரியாலின் முயற்சியினால் கொண்டு வரப்படுபவைகள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்தி வெளியிடுகையில் அவர் இச் சேவைகளை கொண்டு வந்தார் என்றில்லாமால் கல்குடாஹ் தொகுதி அமைப்பாளர் என்ற வகையிலாவது அவரை கௌரவப்படுத்தி இருக்கலாம். ஒரு தொகுதியினுள் நுழைவதானால் அத் தொகுதியின் அமைப்பாளரின் அனுமதியுடன் அவரையும் அழைத்து செல்வதே ஒரு கட்சிக்கான பண்பாகும். ஒருவர் ஒரு வீட்டை கட்டி இன்னுமொருவருக்கு வழங்குகின்றார். குறித்த கட்டிக் கொடுத்த நபர் குறித்த வீட்டினுள் நுழைவதானால் கூட அந்த வீடு வழங்கப்பட்டவரின் அனுமதியோடு வழங்குவதே மரியாதையாகும். கிழக்கு மதலமைச்சரினால் கல்குடாஹ்வில் நடாத்தப்படும் எந்த நிகழ்வுக்கும் ரியால் அழைக்கப்படுவதில்லை. அண்மையில் குடிநீர் வழங்கும் இரண்டாம் திட்டத்தின் போது பிரதேசபை கூட்டத்திற்கென நபர்கள் அழைக்கப்பட்டு உடனடியாக குழாய் பதித்தும் சென்றிருந்தார். இதில் 12km குடிநீர் வழங்கும் திட்டம் ரியாலின் விசேட வேண்டுகோளின் பேரில் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு முதலமைச்சரை பொறுத்தமட்டில் தனது கட்சிக்கு வழங்கும் முக்கியத்துவத்தை விட தனது தனிப்பட்ட செல்வாக்கை கட்டியெழுப்புவதிலேயே அதிகம் அக்கறை காட்டி வருகிறார். மீண்டும் தலைமைத்துவ ஆசை வந்துவிட்டதோ என்னவோ? அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட ஏறாவூரில் இடம்பெற்ற அபிவிருத்தி நிகழ்வில் மு.காவின் தலைவரையே ஒரு பொருட்டாகக் கொள்ளாமை குறிப்பிடத்தக்கது. இவர் முதலமைச்சர் என்ற அந்தஸ்தில் இருப்பதனாலேயே இவர் அழைக்க பிரதமர் வருகிறார். இந்த முதலமைச்சு மு.காவினால் தான் வழங்கப்பட்டது என்பதை அவர் மறந்துவிட்டார்.

அதனோடு ஒப்பிடுகையில் இது ஒரு பெரிய விடயமுமல்ல. இவரின் செயற்பாடு காரணமாக ஏறாவூரை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலான மு.காவிலிருந்து விலகிச் செல்ல சிந்திப்பதாகவும அறிய முடிகிறது. அது மாத்திரமின்று பிரதி அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரிடமும் திறப்பு விழாக்களில் இவர் முரண்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும் இவரின் விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் மிகவும் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கின்றார். இவருக்கு இத்தகை எதேச்சதிகாரம் எதனால் என்ற வினாவுக்கான விடை மிக நீண்டதென்பதால் அதனை இவ்விடத்தில் சுட்டிக் காட்ட விரும்பவில்லை.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *