கொரோனாவை விட கொடியது இனவாதமே, முஸ்லிம்கள் மீதான இனவாதம் தற்போது வலுப்பெற்றுள்ளது. அதன் ஒரு வெளிப்பாடுதான் தற்போதைய சூழலில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது தம்பி மீதான விசாரணை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இன்று கருத்துச் சுதந்திரமும் கெடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்கள். குறிப்பாக நிவாரணப் பணிகளில் ஏற்படும் முறைகேடுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் அரசாங்கத்தால் திடீரென ஊரடங்கு சட்டம் பல மாவட்டங்களில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தளர்த்தப்படுவது மக்களுக்கு மிகவும் ஆபத்தானது.
இது முழுக்க முழுக்க தேர்தலை நோக்கமாக் கொண்டு அரசாங்கம் செய்யும் வேலை. எனவே பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பை தாமாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
புதிய சுகாதார பாதுகாப்பு முறைகளை தாம் தொடர்ந்தும் கடைப்பிடித்து அரசை நம்பாமல் தங்களைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.