பிரதான செய்திகள்

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக ஐ.நா.முகவர்களை சந்தித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஐ.நா. சபையிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரோஹிங்யா முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தலுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைமை அதிகாரி ஜுசெப்பே க்ரொசெட்டியை கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நேரில் சந்தித்து கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேற்படி வேண்டுகோளை விடுத்திருந்தார்.

அத்துடன், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் அதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தெளிவான விளக்கமொன்றை வழங்கிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் மேற்கொண்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ரோஹிங்யா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டு வந்ததை இட்டு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த கோரிக்கை கடிதம் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு உடனடியாக இன்று (புதன்கிழமை) அனுப்பி வைப்பதாகவும் புலம்பெயர்ந்தலுக்கான சர்வதேசஅமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைமை அதிகாரி ஜுசெப்பே க்ரொசெட்டி உறுதியளித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் காத்திரமான நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் – நன்றிகளையும் தெரிவித்தார்.

இதேவேளை இக்கலந்துரையாடலின் போது,

“மியன்மாரில் ராங்கைன் மாநிலத்தில் சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்கள் அங்கு 1200 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருவதாக வரலாற்றுச் சான்றுகள் இருந்தும் அம்மக்களுக்கு குடியுரிமைவழங்க மியன்மார் அரசு முன்வரவில்லை.

குடியுரிமை இல்லாமையால் எந்த உரிமையும்அற்ற சமூகமாக மிகவும் மோசமான முறையில் பௌத்த தேசியவாத அமைப்புக்களாலும் – மியன்மார் அரசினாலும் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய ‘நாடற்ற சிறுபான்மை சமூகமாக’ அடையாளப்படுத்தப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது பௌத்த தேசியவாத அமைப்புக்களினதும் – மியன்மார் இராணுவத்தினதும் வரம்பு மீறிய அட்டூழியங்கள், தாக்குதல்கள் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளன” என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா. தலையீடு செய்து அம்மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களால் இலங்கை முஸ்லிம்கள் மிகவும் ஆழ்ந்த கவலையுடன் இருப்பதுடன், தங்களது எதிர்ப்பினையும் வெளியிட்டு வருகின்றனர்.

எனவே, இலங்கை முஸ்லிம்கள் சார்பில் இந்த விடயத்தில் ஐ.நா.சபை சுமூகமான தீர்வினை வழங்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

புத்தளம் மாவட்ட பட்டதாரிகளினால் முன்னால் அமைச்சர் கௌரவிப்பு

wpengine

நேரடி வர்த்தகம் மற்றும் நிறுவனங்களின் பதிவு குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

Editor

மாகாண சபை தேர்தல் ஒரே நாளில் நடாத்தப்படும்

wpengine