மியன்மாரின் ரொஹிங்யா மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவுமாறு வெளிநாட்டு அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதன் உள்ளடக்கம் வருமாறு.
அமைச்சர் மாரப்பன அவர்களே,
மியன்மாரின் ரொஹிங்யா மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகள்
மியன்மாரின் ராக்ஹின் மாகாண மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமையான குற்றச்செயல்கள் பற்றிய செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளிவராத நாட்களே இல்லையெனக் கூறுமளவுக்கு அங்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன. துரதிஷ்டம் கொண்ட ரொஹிங்யா மக்களுக்கு கடந்த பல வருடங்களாக இழைக்கப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற குற்றச் செயல்கள் சர்வதேசத்தின் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் இடம்பிடித்து வந்துள்ளன. கடந்த சில வருடங்களாக அந்தக் கொடுமைகள் சகிக்கவே முடியாத அளவுக்கு எல்லை மீறியுள்ளன.
இன, மத, மொழி மற்றும் ஏனைய பேதங்களால் அப்பாவி மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் மனிதாபிமானத்துக்கும் மனசாட்சிக்கும் பெரும் அச்சுறுத்தல்களாகும். அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள ரொஹிங்யா மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதும், அவர்களுக்கான விமோசனத்துக்கான உடனடித் தீர்வைக் கொண்டு வருவதும் எமது தலையாய பொறுப்பாகும். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழும் அதே வலயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரீதியில் நாம் அம் மக்களின் நிலைமையை சீராக்குவதற்கும், அவர்கள் அமைதியாகவும் கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் குடியேறி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். இத்தகைய அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாது என்ற உத்தரவாத்தையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.
இலங்கையின் ஆட்சி பீடத்திலுள்ள தேசிய அரசுக்கு பாதிக்கப்பட்ட ரொஹிங்யா மக்களுக்கான விடிவொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான உளப்பாங்கும் வல்லமையும் உள்ளதென நாம் உறுதியாக நம்புகின்றோம்.
இது தொடர்பில் கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எடுக்க வேண்டிய பின்வரும் நடவடிக்கைகளை முன்வைக்கின்றேன்.
01. கொழும்பிலுள்ள மியன்மார் நாட்டுத் தூதுவரை அழைப்பித்து அவர் மூலமாக ரொஹிங்யா மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அதன் மூலம் இந்த வலயத்தின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநிறுத்த வேண்டுமெனவும் எமது அரசாங்கம் மியன்மார் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
02. சர்வதேச முகவர் நிறுவனங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களையும் அவர்களுக்கான புனர் நிர்மாணப் பணிகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
03. ரொஹிங்யா மக்களின் மீது இலங்கை கொண்டிருக்கும் கரிசனை, அவர்களுக்கு விமோசனமொன்றை ஏற்படுத்தித் தருவதன் மூலம் இந்த வலயத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தித் தருவதற்கான எமது நோக்கம் ஆகியவற்றைத் தெளிவுபடுத்தும் பகிரங்க அறிக்கையொன்று வெளியிடப்பட வேண்டும்.
04. பாராளுமன்றத்தில் அமர்வொன்றையோ அல்லது விவாதமொன்றையோ (ளுரழ அழவழ) ஏற்படுத்தி அதன்மூலம் பாதிப்புக்குள்ளாகியுள்ள ரொஹிங்யா மக்கள் உட்பட இந்த வலயத்தின் ஏனைய மக்களும் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கான ஸ்திரத்தன்மையொன்றை ஏற்படுத்த இலங்கை அரசு கொண்டுள்ள ஆர்வத்தையும் அக்கறையையும் தெளிவுபடுத்த வேண்டும்.
பழைய அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்தி, நல்லிணக்கம், ஒருமைப்பாடு, சமாதானம் ஆகியவற்றுக்கான பணிகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் இலங்கைக்கு நாம் மேற்கூறிய பிரேரணைகளை சிறப்பாக முன்னெடுக்க கூடிய வல்லமையும் தைரியமும் உள்ளதென நாம் உறுதியாக நம்புகிறோம். நாம் பரிந்துரை செய்துள்ள இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூ லம் 2025ஆம் ஆண்டின் இந்து சமுத்திர சுமுகமான தொலைநோக்குத் திட்டம் உட்பட பல்வேறு நேயமிக்க, தெளிவான, உறுதியான ஸ்திரத்தன்மை எமது வலயத்தில் உருவாகுமென எதிர்பார்க்கிறோம்.
நாம் மேற்கூறிய பரிந்துரைகளை விரைவாக முன்னெடுப்பதற்கான எமது உச்ச பட்ச ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கத்துக்கும், அதன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கும் அவரது அமைச்சு அதிகாரிகளுக்கும் வழங்குவோம் என உறுதி கூறுகின்றோம்.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம், வெளிநாட்டு அமைச்சர் மாரப்பனவுக்கு எழுதிய கடிதத்தில் காணப்படுகின்றது. இதன் பிரதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி மற்றும் வெகுசன ஊடாக அமைச்சர் மங்கள சமரவீர, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.