உள்நாட்டில் தரமான பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் மட்டுமே நாட்டின் தற்போதைய நிலையை எதிர்கொள்ள முடியும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
உள்நாட்டில் தரமான பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டை விட்டு வீணாக வெளியேறும் டொலர்களை சேமிக்க முடியும். ஏற்றுமதி சந்தையை வெல்லும் அளவிற்கு இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டு வர முடியும்.
ரூபாயை அச்சடிக்க முடியும். ஆனால் டொலர்களை நாம் அச்சிட முடியாது. எனவே, நாம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று தெரிந்தால், அதை உண்மையாக ஏற்றுக்கொண்டால், ‘உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை’ தவிர வேறு வழியில்லை.
நம் நாட்டில் நம் உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். நாம் ரொட்டி மற்றும் பருப்பு பழகிவிட்டோம். ஆனால் இந்த நாட்டில் ஒரு பருப்பு விதை கூட உற்பத்தி செய்யப்படுவதில்லை.
டொலர் பற்றாக்குறை தீவிரமடைந்தால் பருப்பு இறக்குமதி நிறுத்தப்படலாம். அப்போது நாம் பழகிய வாழ்க்கை முறை சவாலாகி விடும்.
சுற்றுலாத் தொழில் வீழ்ச்சியடைந்து வரும் நெருக்கடி, வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் ஏற்படும் வருமான இழப்பு, கடனுக்கான வருடாந்தர வட்டியின் தாங்க முடியாத சுமை போன்றவற்றுக்கு மத்தியில் நாம் இப்போது இருக்கிறோம்.
எனக்குத் தெரிந்த வரையில், அடுத்த ஆண்டு ஜனவரிக்குள், ஏழு பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
நாங்கள் இதுவரை ஒரு வெளிநாட்டுக் கடன் தவணையையும் செலுத்தவில்லை. கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், உலக நாடுகள் திவாலான நாடு என்று அழைக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.