Breaking
Sun. Nov 24th, 2024

“தமது இயலாமையையும், தோல்வியையும் மூடிமறைத்து, மக்களை திசை திருப்புவதற்காகவே ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான கைது வேட்டையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது” – வேலுகுமார் எம்.பி!

அரசியல் பழிவாங்கலை அடிப்படையாகக் கொண்ட அரச கட்டமைப்பின் இந்த அணுகுமுறைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில், வேலுகுமார் எம்.பி. இன்று (16) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டை மீட்டெடுக்கப் போவதாகவும், புது யுகத்தை நோக்கி பயணிப்பதற்கான அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும் கூறி ஆட்சிக் கதிரையில் அமர்ந்தவர்கள், பல மாதங்கள் கடந்தும் பெரிதாக ஒன்றையும் செய்யவில்லை.

அதுமட்டுமல்ல, மக்களுக்காக பல சேவைகளை முன்னெடுக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலையிலும், அவை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தாமல், 20 ஐ தலையில் தூக்கி வைத்து – அதனை நிறைவேற்றிக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறது அரசாங்கம். அதாவது, ஜனநாயகம் பற்றி பேசப்படும் இந்த நவீன யுகத்தில், மீண்டும் சர்வாதிகாரத்துக்கு உயிர் கொடுப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.

இதனால், அரசாங்கம் மீது நாட்டு மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடமேற வைத்த தரப்புகள் கூட, அரசாங்கத்தின் நகர்வுகள் தொடர்பில் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தமது தோல்விகளை மூடிமறைத்து, பெரும்பான்மையின மக்கள் மத்தியில், தமது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்வதற்காக அரசாங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான் ரிஷாட் பதியுதீனை குறிவைத்துள்ளது.

21/4 தாக்குதல் தொடர்பில், விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பல தடவைகள் முன்னிலையாகி ரிஷாட் பதியுதீன் சாட்சியமளித்துள்ளார். அவர் எங்கும் ஓடி ஒழியவில்லை. சட்டரீதியாக முன்னெடுக்கப்படும் முழு நடவடிக்கைகளுக்கும் அவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், தேர்தல் காலத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரை கைது செய்து, 21/4 தாக்குதலுக்காகவே இந்த கைது என்பதை மக்கள் மத்தியில் காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ரிஷாட்டை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையானது, அரசியல் பழிவாங்கலாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேபோல், இந்த அரசாங்கத்தின் கபட நோக்கத்தை பெரும்பான்மையின மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இங்குவாழும் அனைத்து இன மக்களும் இலங்கையர்களாக முன்நோக்கி பயணிக்க முடியும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *