பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

றிஷாட்டின் தீர்வு நகர்வுகள் இருபுறமும் கூரான கத்தியைப்போன்றிருக்கின்றது – சேகு இஸ்ஸதீன்

 

– சேகு இஸ்ஸதீன்

(முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான சிரேஷ்ட சட்டத்தரணியுமான சேகு இஸ்ஸதீன் (வேதாந்தி) முஸ்லிம் சமஷ்டி என்ற தொனிப்பொருளில் 48 பக்கங்களைக் கொண்ட நூலொன்றை வெளியிட்டுள்ளார்.

வட – கிழக்கு தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பிலும் அவர் தனது அனுபவங்களையும் யதார்த்த நிலையையும் அந்த நூலில் அக்குவேறு ஆணி வேறாக வெளிப்படுத்தியுள்ளார்.

முஸ்லிம் சமஷ்டி என்ற நூலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் அரசியல் நிலைப்பாடுகளை அவர் இவ்வாறு விளக்குகிறார்)

(சுஐப் எம் காசிம்)

 

கிழக்குப் பிரிவினைவாத அடுத்த பேச்சாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியதீன் தான். தானே ஒரு அகதியான அமைச்சர் றிசாட் பதியுதீன் வடமாகாண முஸ்லிம் அகதிகளுக்கு ஆற்றியுள்ள அபிவிருத்திப் பணிகள் யாராலும் செய்ய முடிந்திராதவை. அது மட்டுமல்லாது வில்பத்து விடயத்தில் அவர் காட்டிய அக்கறையும் அதுபற்றிய அவரது அறிவும், விவேகமும், வீறாப்பும், போராட்ட குணாம்சமும் முஸ்லிம்களின் மனதில் அவரை ஒரு உயர்ந்த ஸ்தானத்திலேயே வைத்திருக்கிறது.

வடமாகாணத்தை மையப்படுத்தி அவர் உருவாக்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று நாடு பூராகவும், குறிப்பாக கிழக்கிலும் பிரபல்யம் அடைந்து வருகிறது. முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தைக் குறிவைத்து றிசாட் காய்களை நகர்த்துவதாக கசிந்துள்ள செய்தி முஸ்லிம் காங்கிரசை எரிச்சலுக்குள்ளாக்கி இருப்பது தெரிகிறது. றிசாட்டினதும் றஊப் ஹக்கீமினதும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்துக்கான போட்டியில் வடகிழக்கு முஸ்லிம் தேசிய இனப்பிரச்சினை பின்தள்ளப் பட்டுவிடும் என்பது தெரிகிறது.

றிசாட்டின் கிழக்குப் பிரிவினைவாதத்திலுள்ள நியாயங்கள், சவால்களை சந்திக்க தயாராக உள்ளவையாகவே தெரிகின்றன. வடகிழக்கு தேசிய இனப்பிரச்சினை தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக்கிடக்கை யும், வடமாகாண சபை 22.04.2016 இல் முன்வைத்துள்ள தீர்வு வரைபுகளும் றிசாட்டை மோசமாக ஏமாற்றியிருப்பது மட்டுமல்லாமல், எரிச்சலையும் அதிகரித்திருக்கின்றன. அவையே றிசாட்டின் பிரிவினைக் கோஷத்திற்கும் உந்து சக்தியாகவும் அமைந்தன.

மீளக் குடியேறவேண்டுமென்று ஆழத்துடித்துக்கொண்டிருக்கும் வடமாகாண முஸ்லிம் அகதிகளுக்கு அவர் என்ன பதிலைச் சொல்வது? தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கையும், கிழக்கையும் இணைக்க உதவத் தயாராக இருந்த முஸ்லிம்களுக்கு இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கில் எந்த அதிகார சபையும் இல்லை என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக தெரிகிறது. அவர்களுக்கு வடகிழக்கு முஸ்லிம்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அதனால் எப்படி முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பை ஆதரிக்க முடியும்? இதுதான் றிசாட்டின் கேள்வி. இதற்கு த.தே.கூ. என்ன பதிலைச் சொல்லப்போகிறது?

துப்பாக்கி முனையில் துரத்தியடித்து அகதிகளாக்கப்பட்டவர்களில் முக்கால்வாசிப்பேர், சுமார் 100,000க்கும் அதிகமானவர்கள் சிங்கள மாகாணங் களில் சிதையுண்டு வாழுகின்றனர். எப்போது ஊருக்குத் திரும்புவதாம்? என்ற இளசுகளின் கேள்விக்கு என்ன ஆறுதல் சொல்வது? எந்த அதிகாரமும் இல்லாமல் அங்குபோய் இன்னொருமுறை விரட்டி அடிக்கப்படுவதற்காகவா? எப்படித் திரும்பிச் செல்லலாம்? என்ன ஆதாரத்தின் பேரில் திரும்பிச் செல்லலாம்? அதற்கு என்ன வழிவகைகளை த.தே.கூ. மேற்கொண்டிருக்கிறது? சட்ட ரீதியாக நடைமுறைபடுத்தக்கூடிய, முஸ்லிம்களின் அமைதி பாதுகாப்பை உறுதிப்படுத்தி நிலை நிறுத்தக் கூடிய, அந்நியத் தலையீடுகள் இன்றி சுதந்திரமாய் வாழ, சுயாட்சி செய்ய என்ன அதிகார சபைக்கான ஆலோசனையை முன்வைத்திருக்கிறது?

அவர்கள் கூறும் அவர்களுக்கான சமஷ்டி ஆட்சியின் நிலை, பரிமாணம், தத்துவம், அதிகாரங்கள் போன்ற இன்னோரன்னவற்றை தீர்வு வரைபில் வடமாகணசபை விபரித்துக் கூறியிருக்கின்றது. ஆனால் வடமாகாணசபை முஸ்லிம்களுக்கென ஏற்படுத்த விரும்பும் தன்னாட்சிப் பிராந்திய சபையின் தத்துவங்கள், அதிகாரங்களைப் பற்றி வடமாகாண சபை தனது தீர்வு வரைபில் எதையும் குறிப்பிடவில்லை.

சிங்கள மாகாணங்களில் சிதறுண்டு வாழும் மலையகத் தமிழர்களுக்கும் வடமாகாணசபை, மலையகத்தமிழ் தன்னாட்சிப் பிராந்திய சபைக்கான தீர்வை முன்மொழிந்திருக்கிறது. வடகிழக்கு முஸ்லிம்களையும், மலையக தமிழர்களையும் ஒரே தராசில் நிறுத்து மலையகத் தமிழர் அவர்களைப் பொறுத்தவரை கதிப்பதாக காட்டியிருக்கிறது. இதன்மூலம் வடகிழக்கு முஸ்லிம்களை வடமாகாண சபை நான்காம் தரப்பிரஜைகளாகக் காட்டியிருக்கிறது. இந்த மனநிலையோடு உள்ளவர்களுக்கு அதிகாரத்தை இரட்டிப்பாக்க வடக்கையும் கிழக்கையும் இணைக்க உதவத்தான் வேண்டுமா? என்று றிசாட் கேட்டால் என்ன பதிலைச் சொல்ல முடியும்?

வடமாகாண முஸ்லிம்களின் அரசியல் அனுபவங்களையூம் தனித்துவத்தையூம் தமிழர்கள் அகங்காரமின்றி யோசித்துப் பார்த்தால் ஏலவே செய்துள்ளவற்றின் நாற்ற நெடிகளும், இப்போது செய்து கொண்டிருப்பனவற்றின் பித்தல் பிடுங்கல்களும் வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஆனால் பாடம் கற்றுக்கொள்ள தயாரில்லாத மனதில் படிப்பினை எப்படி படியும்? குதிரைக் கொம்புதான். இப்படி நினைக்கத் தூண்டப்பட்டுள்ள வடமாகாண முஸ்லிம் புத்தி ஜீவிகளும் பிரிவை வெறுப்போடு தூக்கிப்பிடிக்க நேர்ந்துள்ளது.

கிழக்கு மாகாண முஸ்லிம்களாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று தானோ றிசாட் பிரிவினை வாதத்தை தூக்கிப்பிடித்துள்ளார்? தமிழ்த் தேசியம் தான் பதில் சொல்ல வேண்டும். அனுபவ ரீதியான அணுகுதல்கள் மூலம் பேச்சு வார்த்தைகளினூடாக நிலைமைகளை கட்டுக்கோப்புக்குள் கொண்டுவர முடியும். ஆனால் கடுவன் பூனைகளுக்கு யார் மணி கட்டுவது என்ற நிலைமைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வடமாகாண முஸ்லிம்களின் சேமலாபங்களை உத்தரவாதப்படுத்த வடமாகாணத்து முஸ்லிம்களுக்கு மட்டும் ஒரு தனியான அதிகார அலகை உருவாக்குவதென்பது நடைமுறைச் சாத்தியமற்றது. அதனால் வடமாகாண முஸ்லிம்களையும், கிழக்கு மாகாண முஸ்லிம்களையும் ஒருங்கிணைத்த ஒரு அதிகாரசபை பற்றி யோசிப்பதே அடுத்த கட்ட நகர்வாக இருக்கும். அதைச் செய்வது எப்படி?.

நிலத்தொடர்பற்ற கிழக்கின் தமிழ் பெரும்பான்மைப் பிரதேசங்களை ஒன்றிணைத்து அடையாளப்படுத்தாமல் முழுக்கிழக்கையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவரும் த.தே.கூவின் யோசனையை முஸ்லிம்கள் முற்றாக நிராகரிக்கின்றனர். ஆகுமான அத்தனையும் செய்து அதைத் தடுக்க அவர்கள் முற்படுவார்கள். சரிதானே! இல்லையென்றால் ஆகும் வழியை த.தே.கூ. சொல்ல வேண்டும். சொல்வார்களா? சொல்லட்டும்!

தமிழரசுக் கட்சி மாநாடுகளிலும்இ தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், விடுக்கப்பட்ட உத்தரவாதங்கள் எல்லாம் கல்மேல் எழுத்தாக இருக்குமென்று பார்த்தால் அவை அனைத்தும் நீர்மேல் எழுதிய வெறும் வாய்ச்சவடால்கள் தான் என்று த.தே.கூட்டமைப்பு சொல்லுமாக இருந்தால், பொய் வாக்குறுதி களிலும் உத்தரவாதங்களிலும் முஸ்லிம்களின் தலையைத் தடவி வைத்திருந்து விட்டு வேளை வந்ததும் வெடி வைத்துத் துரத்தியடித்தது தமிழ் மனோநிலையின் பரிணாம வளர்ச்சியாகும். இவர்களோடு எப்படி கூடிக் குடித்தனம் நடத்துவது என்று றிசாட் கேட்டால் என்ன பதில் சொல்வது?

விரும்பினால் இணைப்புக்கு ஆதரவு அளியுங்கள். இல்லாவிட்டால் உங்கள் இஷ்டம் என்று சொல்லுவது மட்டும்தான் இப்போது தமிழர்களுக்கு பாக்கியாக உள்ளதெல்லாம். சொல்லட்டும்!

இறுதியாக றிசாட் த.தே.கூ.வுக்கு சொல்ல இருப்பது ஒன்றுதான் என்று தெரிகிறது. கிழக்கு பிரியக்கூடாது என்று விரும்புகிறீர்களா? வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவேண்டுமென்று தவிக்கிறிர்களா? இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கென ஒரு சமஷ்டி ஆட்சியோ அல்லது அதற்கு பகரமான வேறு ஏதும் ஆட்சியோ கிடைக்க வேண்டும் என்று துடிக்கிறீர்களா? உங்கள் மக்களை நீங்களே ஆள வேண்டுமென்று துள்ளுகிறீர்களா? நல்லது! அத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். அதற்கு அப்பால் முஸ்லிம்களையும் ஆள வேண்டு மென்று அகலக்கால் வைக்க முனையாதீர்கள். இணைந்த வடகிழக்கில் தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களை உள்ளடக்கிய மாநிலத்தில் உங்கள் ஆட்சி அதிகாரங்களை மட்டுப்படுத்தி உங்கள் மக்களை சிறந்த முறையில் ஆட்சி செய்யுங்கள். அதற்கு எங்களுடைய மானசீகமான வாழ்த்துக்கள்.

ஆனால் அதற்கு அப்பால் ஒரு அடியையும் எடுத்து வைத்து மனங்களை புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள். வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக இருக்கும் பிரதேசங்களில் முஸ்லிம்களின் ஆட்சியை உருவாக்குவதற்கு முடியுமானால் உதவி ஒத்தாசை புரியுங்கள். மாறாக குறுக்கே நின்று குந்தகம் விளைவிக்க முனையாதீர்கள். அடுத்தவர் உரிமையிலும் ஆசை வைக்காதீர்கள். வாழுங்கள்! பிறரையும் வாழ விடுங்கள்! என்று றிசாட் சொன்னால் என்ன செய்யப் போகிறார்கள்?

றிசாட்டின் மேல் உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட கோபதாபம் இருந்தால் அதற்காக முழு வடகிழக்கு முஸ்லிம்களையும் தண்டிக்க எண்ணாதீர்கள். அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள அடம்பிடிக்கும் தழிழர்களை அவர்கள் இடத்திற்கே விட்டு விட்டு அவர்கள் தண்டிக்கப்பட அனுமதிக்கும் அதே வேளையில் நாமும் தண்டிக்கப்படுகின்றோம் என்பது றிசாட்டுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழ்மொழிச் சமுகங்கள் இரண்டில் ஒன்றுக்கு ஏதேனும் திகைப்பும் தடுமாற்றமும் ஏற்பட்டிருந்தால் அதனை சுகப்படுத்தும் கடமை மற்ற சமூகத் திற்கு ஒரேயடியாய் இல்லாமல் போய்விடாது. தமிழர்களுக்கு அவர்கள் அறியாத புறத்திலிருந்து எழும்பச் சாத்தியமான திடுக்கங்களையூம் நடுக்கங் களையும் பற்றி அறிந்திருந்தால் அதனை அறிவிக்க வேண்டிய பொறுப்பு நிச்சயமாக றிசாட்டுக்கும் உண்டு.

தமிழர் தரப்பை பேச்சுவார்த்தைக்கு இழுத்து யதார்த்தத்தை அவர்களுக்கு திரை நீக்கம் செய்யவேண்டிய பொறுப்பும் தழிழ்மொழித் தனையன் என்பதால் றிசாட்டுக்கும் உண்டு. உள்ள ஒரே வழி முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி தமிழ் தேசியக்கூட்டமைப்போடு சம அந்தஸ்தில் பேச்சு வார்த்தை களில் விசுவாசமாக ஈடுபட வைத்து பரஸ்பர நன்மைக்கான தீர்வுகளைத் தேடி ஒருமித்து, முன்வைத்து உரிமைகளை வெல்லுவது தான். அதனால் றிசாட் மறுபுறத்து முயற்சிகளிலும் பொறுமையூடனான ஆர்வத்தைக் காட்ட வேண்டியது அனைத்து தமிழ்பேசும் மக்களுக்கு நன்மையானதாகவே முடியும்.

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் வன்னித்தேர்தல் மாவட்டத் தலைவராகவும் ஐவர்கொண்ட தலைவர் குழுவின் முதல் தலைவராகவும் றிசாட் பொறுப்பேற்க வேண்டுமென்று நாம் அவரிடம் மூன்று மாதங்களுக்கு முன்னரேயே சொல்லி இருந்தோம். அவர் அதனை அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் நினைக்கின்ற மாதிரி எதுதான் நடக்கிறது! ஆனால் இப்போது அதற்குரிய காலம் கனிந்து வந்தாற் போல் தெரிகிறது. றிசாட் விவேகி மட்டுமல்ல வேகியும்தான். அவரது வேகத்தை பார்க்கத்தான்போகிறோம். பார்க்கலாம்.

Related posts

நாளை விசேட அமைச்சரவைக் கூட்டம் – கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் ஆராய்வு!

Editor

தயா கமகேயின் இனவாதத்தை வேடிக்கை பார்க்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்

wpengine

நுரைச்சோலை வீட்டுத் திட்டம்! அதாவுல்லாவும் குற்றப்பரிகாரமும்

wpengine