பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
இந்த நிலையில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான அரசியல் சூழ்நிலை தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சில தினங்களுக்குள் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், நேற்று சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போதே பிரதமரின் பதவி விலகல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலில் ராஜித சேனாரத்ன,சம்பிக்க ரணவக்க, மஹிந்த அமரவீர, அர்ஜுன ரணதுங்க, சரத் பொன்சேகா, பழனி திகாம்பரம், கருணாரத்ன பரணவிதான ஆகிய முக்கிய அமைச்சர்கள் குழுவினர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்னர் பிரதமரை பதவியில் இருந்து விலக அழுத்தங்கள் கொடுக்கபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்னவை புதிய பிரதமராக நியமிப்பதற்கும் குறித்த கலந்துரையாடலின் போது ஆலோசிக்கப்பட்டதாகவும் கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் முயற்சிகளே தற்போது இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இலங்கை அரசியலில் அடுத்தது தெரியாத பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ளதோடு, பிரதமரருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையிலும் எதுவித தகவல்கள் வெளிப்படுத்தாமல் மௌனம் சாதித்து வருகின்றார்.
இதன் காரணமாக ஒரு தரப்பு மஹிந்தவுடன் ஜனாதிபதி கூட்டு வைத்துள்ளார் எனவும் செய்திகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எது எப்படியானாலும் பிரதமர் ரணில் பாரிய நெருக்கடி நிலையில் இருப்பதாக கூறும் தென்னிலங்கைச் செய்திகள் பதவி விலகுவதே கட்சிக்கும் ஆட்சிக்கும் சிறந்தது எனும் கருத்து கட்சி முக்கியஸ்தர்களிம் உள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.