இலங்கையில் சமகாலத்தில் இரண்டு விதமான பாரிய பிரச்சினைகள் தீவிரம் அடைந்துள்ளன. அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையற்ற நிலை, பொருளாதார ரீதியான பாரிய பின்னடைவுகள் என்பன இவையாகும்.
பொருளாதார நெருக்கடிக்கு தேவையான டொலரினை பெற்றுக்கொள்ள உலக நாடுகளின் உதவியை நாடி உள்ளனர். எனினும் அரசியல் ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு என்பது எட்டப்படாத முடியாத இடியப்பச் சிக்கலாக மாறியுள்ளது.
அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அதனை இழக்கும் நிலைக்கு வந்துள்ளது. அடுத்த ஆட்சியாளர்கள் யார் என்பது தொடர்பில் இழுபறிகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலகி புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என நம்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய பிரதமர் மகிந்த ராஜபக்ச சிறுபான்மை அதிகாரங்களைக் கொண்ட பிரதமராகியுள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய சத்தியக் கடதாசி ஒன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கத்தின் காலம் முடியும் வரையில் தானே பிரதமர் பதவியில் நீடிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ச தற்போது அழுத்தமாக தெரிவித்து வருகின்றார். அவரின் ஜாதகத்தில் ஏற்பட்ட சாதகமான கிரக பலனின் அடிப்படையில் இந்த உறுதிப்பாட்டை அவர் எடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவிக்கின்றனர்.