ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
கோத்தபாய இரட்டை பிராஜாவுரிமையை வழங்கும் வகையில், 2005 ஆம் அண்டு நவம்பர் 21 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டுள்ள ஆவணம் சட்டப்பூர்வமற்றது அல்லது போலியானது என தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவை விசாரணைக்கு எடுத்து தீர்ப்பொன்று வழங்கப்படும் வரை, கோத்தபாய ராஜபக்ஸவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்ள முடியாதென இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த மனு மீதான விசாரணையின் முடிவில், மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதற்கமைவாய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.