Breaking
Sun. Nov 24th, 2024

சுஐப் எம்.காசிம்
தேர்தல் பெறுபேறுகள் பலமான எதிர்க்கட்சி இல்லாதுள்ளதை வெளிப்படுத்தி, தென்னிலங்கைவாதிகளின் பலத்தைப் பறைசாற்றியுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைப் பெற விரும்பாத அரசியல் சிந்தனைகள் இன்னும் ஒரு தசாப்தத்தில் அடையாளமிழக்கவுள்ளதையே இம்முடிவுகளும் காட்டுகின்றன. எனவே, இனியாவது சாத்திய அரசியல் பயணங்களுக்குப் புறப்பட சிறுபான்மை அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும். அதற்காக எதையாவது பெற்றுக்கொள்வதென்பதும் பொருளல்ல. 


மோதலைத் தூண்டி, முரண்பாட்டை வளர்க்கும் நிலைப்பாடுகள் எதிர்கால ஆரோக்கியத்திற்கு உகந்ததாகாது. உள்நாட்டு அரசியல் பேச்சுக்களைப் பலப்படுத்தித்தான் அரசியல் தீர்வுகள் பெறப்பட வேண்டுமே தவிர, இன்னும் நோர்வே, ஐரோப்பிய யூனியன், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தயவை நாடினால், வேரூன்றியுள்ள தென்னிலங்கைவாதம் இன்னும் பலப்படவே செய்யும். 


ராஜபக்ஷக்களின் தொடர் வெற்றிகள் சர்வதேசத்துக்கும் பல செய்திகளைச் சொல்லி வருகின்றன. இலங்கையின் மிகச்சிறியளவிலான ஒரு சமூகம், நாட்டின் கால்வாசிக்கும் அதிகமான நிலப்பரப்புக்கு ஆள்புல அடையாளத்தைக் கோருவதை, தென்னிலங்கைவாதிகள் விரும்பவில்லை என்பதையே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திடீர் தலையெடுப்புக்கள் காட்டி வருகின்றன. இதுபற்றி கூர்மையாக அவதானிக்கும் சர்வதேசம், “இலங்கையின் ஆள்புலம் ஐக்கியத்திற்கு உட்பட்டது. இது, கூறுபோடப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுமளவிற்கு சிறுபான்மை சக்திகள் பலப்படவில்லை. ஆள்புல அடையாளத்துக்கு தனி அந்தஸ்துக் கோருமளவிற்கு அடக்குமுறைகள் இருந்தால் சிறுபான்மை அரசியலுக்குள் பிளவுகள் ஏற்பட நியாயமும் இல்லை. எனவே, வெறும் அரசியல் கோஷங்களாகத்தான் இவை இருக்க முடியும்” என்பதுதான், சர்வதேசத்தின் இன்றைய நிலைப்பாடுகளாகி வருகின்றன.


மேலும், ஒரு பெரும் போர், சாதிக்காத சமஷ்டி , இலட்சியம் வெறும் அரசியல் சக்திகளால் அதுவும் கூறுபாடடைந்து குழம்பிப்போயுள்ள கட்சிகளால் வென்றெடுக்கச் சாத்தியமற்றவை என்பதாகத்தான் சர்வதேசம் இதைக் கருதுகிறது. எனவே, முடிந்தவரை தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் இணங்கிச் சென்றுதான், நாம் அடையத்தவறிய அரசியல், இலட்சியங்களை வென்றெடுக்க வேண்டியுள்ளது. மேலும், சகவாச அரசியலைக் கைவிட்டு, சர்வதேசத்தை நாடுவது இன்னுமின்னும் தென்னிலங்கைவாதத்தைப் பலப்படுத்தும் அபாயமுள்ளதை சிறுபான்மையினர் உணர்ந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். இதற்குப் பின்னர் எதிர்கொள்ளவுள்ள தேர்தல்களிலாவது, இந்த யதார்த்தத்தை இவர்கள் புரிந்துகொள்வார்களா? புரியத் தவறினால், தமது மக்களைத் தனிமைப்படுத்திய விமர்சனத்தை, இத்தலைமைகள் ஏற்க நேரிடலாம். 
இன்று தென்னிலங்கைவாதிகள் பெற்றுள்ள வெற்றி, இப்பிராந்தியத்தின் சிறுபான்மைச் சமூங்களைத் தனிமைப்படுத்தியது மட்டுமின்றி, தயவு அரசியலுக்குள் இவர்களைத் திணித்துமுள்ளது. முப்பது வருடப் பிரிவினைவாதப் போர் மற்றும் திடீரெனத் தோன்றிப் பயங்கரமாடிய அடிப்படைவாத ஈஸ்டர் தாக்குதல் என்பவற்றில் எவ்வித தொடர்போ, சம்பந்தமோ இல்லாவிடினும், இவர்களின் சமூகங்களைச் சார்ந்தோரே இக்கொடூரங்களைச் செய்ததாகவே இன்று வரைக்கும் தென்னிலங்கை கருதுகிறது. இது தென்னிலங்கைச் சிறுபான்மையினரை (இவர்கள்தான் நாட்டிலும் சிறுபான்மையினர் என்பதையும் மறக்கலாகாது) அச்சப்படுத்தி, தனிமைப்படுத்தும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. 


இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சிங்களப் பெருந்தேசியத்தின் நாயகர்களான ராஜபக்ஷக்களுக்கு எதிரானவர்களாகவே இச்சமூகங்களின் தலைமைகள் இவர்களைத் திருப்பியுமுள்ளன. இதுதான் இன்று ஏற்பட்டு வரும் அரசியல் மாறுதல்கள். இந்த மாறுதல்களுக்குள் மாற்றம் வேண்டிப் பயணிப்பதுதான் சிறுபான்மையினருக்கு ராஜதந்திரம். 
விடுதலை வேண்டிய விடுதலைப் போர், காலவோட்டத்தில் படுகொலைப் போராக மாறியதால், எமக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இன்னும் தோல்வியையே வரலாறாக எழுதி வருகையில், இன்னுமா நாம் ஏமாறுவது? கட்சிகள் மக்களை ஏமாற்றுவதை விடவும் எமது சிறுபான்மைத் தலைமைகள் தொடர்ந்தும் தென்னிலங்கையிடம் ஏமாறுவதுதான் பெரும் கவலை. பொதுவாக நிலைமாறாமல் இருந்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் என்பதும் அண்மைக்காலமாக உணர்த்தப்பட்டு வருவதையும் நமது கவனங்கள் கண்டுகொள்ள வேண்டும்.
இந்தக் கவனங்கள்தான் சரியான கணிப்பீடுகளுக்கு அளவுகோலாக அமையும். கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளின் வெற்றி இதற்குப் பின்னர் சமயோசித, சகவாச அரசியலில்தான் கிடைக்கச் சாத்தியமாகவுள்ளன.

சிங்களப்புலத்துக்கு வெளியிலிருந்து வரும் அழுத்தங்கள், சிந்தனைகள் என்பவையெல்லாம் இதற்குப் பின்னரும் தமிழ் பேசும் சமூகங்களைப் பெருந்தேசியத்திலிருந்து புறந்தள்ளவே செய்யும். 
போரின் வெற்றிக்குப் பின்னர், ராஜபக்ஷக்கள் கைக்கொண்ட யுக்திகள் மற்றும் இவ்வுக்திகளைத் தோற்கடித்து நல்லாட்சி அரசில் சிறுபான்மையினர் செலுத்திய செல்வாக்குகள்தான் இப்புதிய போக்குகளை ஏற்படுத்தி, தென்னிலங்கைவாதத்தைப் பலப்படுத்தி வருகிறது.

இந்நிலைமையில், பலவீனப்பட்டு வரும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவங்கள், ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கிற்கு கடிவாளமில்லாமல் செய்துவிடுமே என்று கவலைப்படுவோரும் இருக்கவே செய்கின்றனர். 
எழுச்சியுடன் எதிர்பார்க்கப்பட்ட மாற்றுத் தலைமைகள், வடக்கில் மூன்று ஆசனத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை தமிழர் தரப்பின் நம்பிக்கைகளை வெளிநாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. ஒரு வகையில், இது மீண்டும் வெளிநாடுகளின் தலையீடுகளை தோற்றுவிக்காவிட்டாலும் இனப்பிரச்சினை விடயத்தில் அதிக அக்கறைப்பட வைக்கலாம். இந்த அக்கறைகள் தென்னிலங்கைவாதிகளை அச்சப்படுத்தாதிருப்பதுதான் உரிமை அரசியலுக்கு ஆறுதலானது. 


கடந்த பாராளுமன்றத்தில் 16 ஆசனங்களை வென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, இம்முறை 10 ஆசனங்களை வென்று சரிந்தாலும் ஏக பிரதிநிதித்துவம் என்ற அந்தஸ்த்தை தக்க வைத்துள்ளதாகத்தான் கருத வேண்டும். இனிவருங் காலங்களிலாவது விவேகத்துடன் செயற்படத் தயங்கினால், வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படுகிறதோ இல்லையோ, உரிமை அரசியலில் நம்பிக்கை இழக்கும் நிலையை ஏற்படுத்தலாம். 


முஸ்லிம் தலைமைகளுக்கும் இம்முடிவுகளில் பல படிப்பினைகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை வென்றதால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அகலக்காலூன்றுவதான அந்தஸ்தை ஏற்படுத்தியுள்ளது உண்மைதான். மேலும், கடந்த பாராளுமன்றத்தில் பெற்ற அதே நான்கு ஆசனங்களையே வென்று, இருப்பைப் பலப்படுத்தினாலும், புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஆசனத்தை வென்றமை சாமர்த்தியம்தான். “இத்தனை கெடுபிடிகளுக்குள்ளா இந்த ஆசனங்கள்? ” என்ற சிலரின் ஆச்சர்யங்கள், இக்கட்சியின் மவுசை உயர்த்தவே செய்கிறது. 


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதே ஐந்து ஆசனங்களையே வென்று, தலைமைக்கான அந்தஸ்தை தக்க வைத்துள்ளது. இவ்விரு தலைமைகளுக்கும் தேசியப் பட்டியல் வழங்கப்பட்டிருந்தால், முஸ்லிம் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரித்திருக்கும்.


ஆனால், தேசிய காங்கிரஸின் மீள் வருகை, இவ்விரு தலைமைகளுக்கும் சங்கடம்தான். ராஜபக்ஷக்களுடன் இக்கட்சிக்குள்ள நெருக்கம், ஏனைய தலைமைகளின் நெருங்குதல்களை தடுப்பதாக இருப்பதுதான் அது. 
இன்னும், தென்னிலங்கைவாதிகளுக்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இலகுவாக இருக்கையில், வேறெவரின் தேவைகள் எதற்கு? இங்குதான் இணக்க அரசியல் அவசியப்படுகிறது.

இதை இரண்டு ஆசனங்களை வென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், மீளத் தழைத்த தேசிய காங்கிரஸும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் நன்கு பயன்படுத்தவே செய்யும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *