ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது என்பதை மக்கள் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்கள். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அவர் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்குகிறாரே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
வரி அதிகரிப்பு, தேசிய வளங்களை விற்றல் இதுவே ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையாக உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்,எமக்கும் இடையில் தனிப்பட்ட வெறுப்பு ஏதும் கிடையாது,பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய ராஜபக்சர்களை தொடர்ந்து பாதுகாப்பதற்காக அவர் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி, ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுகிறார்.
பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம், ஆனால் நல்லாட்சியில் பிரதமர் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க ஊழல் மோசடியாளர்களுடன் ரகசிய டீல் அமைத்துக் கொண்டார்.
இவரது செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை வெறுத்தார்கள். இதன் பின்னணியில் தான் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய மற்றும் பொதுஜன பெரமுனவின் பலவீனமான நிர்வாகத்தை நாட்டு மக்கள் இரண்டரை வருட காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்தார்கள். தற்போது இவர்களின் பிரநிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்கிறார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது என்பதை மக்கள் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அவர் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்குகிறாரே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என குறிப்பிட்டுள்ளார்.