கோடிக்கணக்கான பணமும் சொத்துகளும் இப்போது இருக்கின்றது ஆனால் அதற்கு உரிமை கொண்டாட எவரும் இல்லை என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சி.எஸ்.என் நிறுவனத்திற்கு சொந்தமான 236 மில்லியன் பெறுமதியான பணத்தில் 157 மில்லியன்களுக்கு உரிமையாளர் இப்போது இல்லை.
157 மில்லியன் பணம் இருக்கின்றது, ஆனால் அதற்கான உரிமையாளர் எவரும் இல்லை. தற்போது அந்தப்பணம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனை பெறுப்பேற்க எவரும் இல்லை அதனால் அதனை அரச சொத்தாகவே மாற்றும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பணத்தினை ஏழை மக்களுக்கு கொடுக்கும் படி பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் நான் பரிந்துரை செய்துள்ளேன்.
அதேபோன்று மல்வானையில் பசில் ராஜபக்சவிற்கு சொந்தமான இடம் எனக் கூறப்பட்ட இடத்திற்கும் தற்போது உரிமையாளர் எவரும் இல்லை.
18 ஏக்கர் இடம் உள்ளது, அந்த இடத்திற்கு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு உரிமைகோரி எவரும் வரவில்லை. அதனால் அந்த இடத்தினை பொலிஸ் பயிற்சி நிலையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றிற்கு ராஜபக்சர்கள் உரிமை கோருவார்கள் என நினைக்கின்றேன். சி.எஸ்.என் நிறுவனத்தின் உரிமையாளர் ரோஹித ராஜபக்ச முதுகெலும்பு உள்ளவர் என்றால் இப்போது 157 மில்லியன் எனது என்று முன்வர வேண்டும்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார் “நான் ஒரு டொலராவது கொள்ளையிட்டேன் என நிரூபிக்க முடியுமானால் எனது வயிற்றை வெட்டிக் கொள்வேன் என்று தெரிவித்திருந்தார்.
இப்போது முடியுமானால் அந்த கோடிக்கணக்கான பணம் எனது என்று கூறி முன்வாருங்கள். அரசின் நடவடிக்கைகளால் பரிதாப நிலையினை மகிந்தவும், திருடர்களும் இப்போது சந்தித்து கொண்டு வருகின்றார்கள்.
மேலும் ராஜபக்சர்கள் மீது தனிப்பட்ட விரோதம் காரணமாக இவற்றினை செய்யவில்லை நாட்டிற்காகவே இதனை செய்கின்றோம்.
நாட்டில் முறையான நீதி நடைபெறுகின்றது. இதனை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
மக்களின் பணம் மக்களுக்கு சென்று சேரும் அதற்கான முயற்சியிலேயே இப்போது அரசு ஈடுபட்டு வருகின்றது எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.