பிரதான செய்திகள்

ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களை ஏமாற்றி தம் வயிற்றுப் பிழைப்பை நடத்த வேண்டாம்

புதிய அரசியலமைப்பு திருத்தம் மக்கள் வழங்கிய ஆணையை அரசு நிறைவேற்றவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்வது பேருந்தை போகவிட்டுவிட்டு கையை காட்டும் ஹக்கீமின் வழமையான பேச்சாகும் என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.


முஸ்லிம் உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில்,

இந்த ரணில் அரசாங்கம் என்பது 99 வீதம் முஸ்லிம்கள் ஆதரவளித்து கொண்டு வந்த அரசாங்கமாகும்.
இலங்கை வரலாற்றில் எந்த அரச காலத்திலும் அனுபவிக்காத கொடுமைகளை இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக தென்னிலங்கை முஸ்லிம்கள் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு முன்பும் பின்பும் அனுபவித்து விட்டனர்.

இந்த ஆட்சியை கொண்டு வந்த முஸ்லிம் காங்கிரஸ் எப்போதோ முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், தமக்கு பதவிகள் பெற்றுக்கொண்டு உல்லாசம் அனுபவித்தார்களே தவிர சமூகத்தின் எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தரவில்லை.

இடையில் பிரதமர் குழப்பம் வந்த போதாவது இவர் சொல்லும் யாப்பு திருத்தம், முஸ்லிம் உரிமைகளுக்கான உத்தரவாதத்தை ரணில் மூலம் எழுதி வாங்கியிருக்க முடியும். இதையெல்லாம் செய்யாமல் தூங்கிவிட்டு இப்போது மருண்டவன் போன்று பேசுவது ஹக்கீமின் அடுத்த ஏமாற்றாகும்.

புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்காகவே தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கினர். ஆனால், அரசாங்கத்தினால் அதனை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதாகவும் தமிழ் மக்களை போல் முஸ்லிம்களும் விரக்தியில் உள்ளனர் என ஹக்கீம் சொல்வது பிழையாகும்.

முஸ்லிம்கள் புதிய அரசியல் யாப்புக்காக இந்த ஐ.தே.க அரசுக்கு வாக்களிக்கவில்லை. மாறாக தாம் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்கே வாக்களித்துள்ளனர்.

புதிய அரசியல் யாப்பு மாதிரியில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளதன் மூலம் இத்தகையதொரு யாப்பு அவசியமில்லை என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும்.

ஆகவே, பல இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று அரசுக்கு கொடுத்து விட்டு முஸ்லிம்களின் உரிமைகள் எதையும் பெற்றுக்கொடுக்க முன்வராமல் அவசியமற்ற பேச்சுக்களை நாடாளுமன்றத்தில் பேசி தொடர்ந்தும் முஸ்லிம்களை ஏமாற்றி தம் வயிற்றுப் பிழைப்பை நடத்த வேண்டாம் என ஹக்கீம் போன்றவர்களை கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பணம் தூய்மையாக்கல்! நாமலுக்கு எதிராக வழக்கு தாக்கல்

wpengine

எனக்கெதிராக தமிழ்ச் சமுதாயத்தை சீண்டி விட்டார்கள் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

அரிய வகை நோயினால் அவதிப்படும் இரு குழந்தைகள்!

wpengine