(சுஐப் எம் காசிம்)
அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (28) நிதியமைச்சில் மீண்டும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவின் தலைமையில் இன்று (21) மாலை 9நிதியமைச்சுக்கட்டிடத் தொகுதியில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், தயாகமகே பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் கரும்பு உற்பத்தியாளர்கள் ஹிங்குரான சீனிக்கூட்டுத்தாபனத்தை நிர்வகிக்கும் கல்லோயா பெருந்தோட்டக் கம்பனியினர் தமக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகள் குறித்தும் கரும்புப்பயயிர்செய்கையில் தாங்கள் முகங்கொடுக்கும் கஷ்டங்கள் குறித்தும் விலாவாரியாக விளக்கினர்.
கல்லோயா பெருந்தோட்ட கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காமினி உட்பட அம்பாறை மாவட்ட அரச அதிபர் துசித வனவிட பிரதியமைச்சர் ஹரீஸ் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான ஏ எம் ஜமீல், எஸ் எஸ் பி மஜீத் சட்டத்தரணி மில்ஹான், நபீல் மற்றும் மு கா முக்கியஸ்தரான பி ஏ பழீல், முன்னாள் எம் பி ஹாபிஸ் உட்பட விவசாயிகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் இப்திகார் ஆகியோர் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கரும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை ஆதாரங்களுடன் விளக்கினர்.
அரசுக்கும் கம்பனிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்ததுக்கு மாறாக கம்பனி நிர்வாகம் செயற்படுவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கம்பனி நிர்வாகத்தை கடிந்து கொண்டார்.
காலாகாலமாக கரும்புச்செய்கையில் ஈடுபடும் கரும்பு உற்பத்தியாளர்கள் வாழ வழியின்றி வதைபடுகின்றனர். இந்த தொழிலியேயே சீவனோபாயம் நடத்தி வரும் இந்த அப்பாவி விவசாயிகள் தங்களது குடும்பத்தை பராமரிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.
முதலாளிகள் என்ற மனோபாவத்தில் மனிதத்தன்மையில்லாமல் உற்பத்தியாளர்களை நிர்வாகம் நடத்துவதாக அவர்கள் இங்கு தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் இந்தக் கம்பனியில் 51% பங்கை கொண்டிருந்த போதும் கம்பனி நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் இந்தத் தொழில் பாரிய நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கின்றது. கரும்பு உற்பத்தியாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இந்த சீனிக் கூட்டுத் தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்க வேண்டுமென்பதே மக்கள் பிரதிநிதிகளான எங்கள் கோரிக்கையாகும் என்றார்.
அமைச்சர் ஹக்கீம் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
கரும்ப உற்பத்தியாளர்களுக்கென விஷேட வியாபார முறையொன்று அமைக்க வேண்டுமென வலியுறுத்தியதோடு இந்தப் பிரச்சினையை இனியும் இழுத்துக் கொண்டு செல்லாது தீர்த்து வைக்க வேண்டியதன் அவசியத்தை இடித்துரைத்தார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தப்பிரச்சினையை மனிதாபிமான ரீதியில் அணுகி எவருக்கும் எந்தத் தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கும் வகையில் மக்கள் பிரதிநிதிகள், கம்பனி நிர்வாகம், விவசாயிகள், கரும்புச் செய்கையாளர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை ஒன்று கூடி உரிய தீர்க்கமான தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.
12145 ஏக்கர் விஸ்தீரணத்தில் ஹிங்குரான சீனிக்கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இந்தக் காணியில் 4454 கரும்பு உற்பத்தியாளர்கள் செய்கையில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.