முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை அவரது கட்சியே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் அவரைப் போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே சிறந்தது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வியாழக்கிழமை (06) பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற பெண் அமைப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியலில் ஈடுபடுகின்றோம். மாறாக வேறு சில கட்சிகளைப் போன்று நாம் அராஜகமாக அச்சுறுத்தி அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி பலவந்தமாக ஆட்சியை கொண்டு செல்பவர்களும் அல்ல. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் மக்கள் கோரிக்கை விடுத்தவுடன், அது ஜனநாயகத்துக்கு முரணான கோரிக்கையாக இருந்த போதிலும், அவர் ஆட்சியை ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டு மக்களுடன் அரசியலில் ஈடுபட்டவர்கள். நாம் என்றும் மக்களுடனேயே இருப்போம். ஒருபோதும் பொய் கூறி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்க மாட்டோம். நாம் யார் என்பதை மக்கள் அறிவார்கள். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தீர்மானமும் எம்மால் எடுக்கப்படவில்லை. நாம் நாட்டுக்கு துரோகமிழைக்கவுமில்ல்லை.
எனவே தான் மக்கள் எமது கொள்கைகளை நம்புகின்றனர். தற்போதைய அரசாங்கம் எம்மைப் போன்றவர்கள் மாத்திரமின்றி, 97 வயதுடைய எனது பாட்டியின் கழுத்தையும் நெறிக்கின்றது. 10 ஆண்டுகளின் பின்னர் வாக்குமூலளிப்பதற்கு அழைப்பாணை விடுக்கப்படுகிறது. சில அரசியல் சக்திகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் வங்குரோத்தடையும் போது இவ்வாறு தான் செயற்படும்.
பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுபவர்கள் 97 வயது பாட்டியை காலையிலிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருத்தி, பகலுணவைக் கூட வழங்காமல் வாக்குமூலம் பெறுகின்றனர். எவ்வாறிருப்பினும் நீதிமன்ற சுயாதீனத்தன்மை மீது எமக்கு நம்பிக்கையிருக்கிறது. நாமல் ராஜபக்ஷவின் கழுத்தை நெறிப்பதாலேயோ, எனது பாட்டியை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைப்பதாலேயோ எமது பயணத்தை தடுக்க முடியாது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை அவரது கட்சியே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் அவரைப் போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே சிறந்தது என்றார்.